குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீது தடியடி: போலீசாரை கண்டித்து முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் - நாகையில் நடந்தது


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீது தடியடி: போலீசாரை கண்டித்து முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் - நாகையில் நடந்தது
x
தினத்தந்தி 17 Feb 2020 3:45 AM IST (Updated: 17 Feb 2020 6:12 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீது தடியடி நடத்திய போலீசாரை கண்டித்து நாகையில் முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம், 

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தமிழகத்திலும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முஸ்லிம்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர்.

அதன்படி நேற்று நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே முஸ்லிம்கள் அவுரித்திடலில் திரண்டனர். முன்னதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே உள்ள நீதிமன்றம் நுழைவு வாயில் முன்பு இரும்பு தடுப்புகளை அமைத்து துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் கலவரத்தை தடுக்கும் வஜ்ரா வாகனமும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து தடுப்புகளுக்கு முன்பு முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யவேண்டும். குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றுக்கு எதிராக தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராடிய மக்கள் மீது தடியடி நடத்திய போலீசாரை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் தேசியகொடியை கையில் ஏந்தியபடி கோ‌‌ஷங்களை எழுப்பினர். இதில் 150-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட னர்.

இதேபோல் சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லிம்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனை கண்டித்து நேற்றுமுன்தினம் வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் நேற்று போலீசாரை கண்டித்து தோப்புத்துறை பெரிய பள்ளிவாசலில் ஜமாத் மன்ற தலைவர் ஷேக்அப்துல்லா தலைமையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் சாகுல்அமீது கலந்துகொண்டு பேசினார். அதனை தொடர்ந்து 880 முஸ்லிம் குடும்பத்தினர் நோன்பு (உண்ணாவிரதம்) இருந்தனர்.

Next Story