பொன்னை, புதுப்பாடி அணைக்கட்டுகளை 10 அடி உயர்த்த வேண்டும் ; குறைதீர்வு நாள் கூட்டத்தில் மனு
பொன்னை, புதுப்பாடி அணைக்கட்டுகளை 10 அடி உயர்த்த வேண்டும் என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.
ராணிப்பேட்டை,
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஸ்ரீவள்ளி, தனி துணை கலெக்டர் தாரகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுமக்களிடம் இருந்து கலெக்டர் திவ்யதர்ஷினி மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இதில் கல்வி உதவித்தொகை, வங்கி கடன் உதவி, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 350–க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.
கூட்டத்தில், ராணிப்பேட்டையை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் கொடுத்துள்ள மனுவில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னை மற்றும் புதுப்பாடி அணைக்கட்டுகளை 10 அடி உயர்த்தி, 10 அடி ஆழத்திற்கு தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுப்பாடி அணைக்கட்டில் இருந்து, ராணிப்பேட்டை மேம்பாலம் வரையிலும், பொன்னை அணைக்கட்டில் இருந்து பொன்னை பாலம் வரையிலும் ஆற்றின் இருபுறங்களிலும் கரையை பலப்படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இதை மேற்கொண்டால் சுற்றுப்புற கிராமங்களில் நீர்மட்டம் உயரும், விவசாயத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்ட மணல் மற்றும் கனிமம் கட்டுமான பொருள் ஏற்றும் டிப்பர் லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் அதன் தலைவர் சங்கர்கணேஷ் கொடுத்த மனுவில், ராணிப்பேட்டையை அடுத்த அக்ராவரம்–மலைமேடு சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலை வழியாக தான் சிப்காட் பகுதி–3–ல் உள்ள தொழிற்சாலைகளுக்கு கனரக வாகனங்கள், சுற்றுப்புறங்களில் கிராமங்களுக்கு பஸ்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் வாகனங்கள் ஆபத்தான நிலையில் சென்று வருகின்றன. எனவே, போர்க்கால அடிப்படையில் சாலையை சீரமைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
நவ்லாக் புளியங்கண்ணு பஞ்சாயத்து மக்கள் நலச்சங்கம் சார்பில் கொடுத்துள்ள மனுவில், நவ்லாக் ஊராட்சியில் புளியங்கண்ணு, அவரக்கரை கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்களின் வீட்டிற்கு இதுவரை பட்டா வழங்கவில்லை. இதனால் அரசின் நலத்திட்டங்களை பெறவும், தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன், பண்ணை கடன் மற்றும் சிறு குறு கடன் வாங்க முடியவில்லை. எனவே, வீட்டு மனைபட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை எமரால்டு நகர் பகுதி பொதுமக்கள் சார்பில் கொடுத்துள்ள மனுவில், எங்கள் பகுதியில் உள்ள விநாயகர் கோவில் அருகில் ஓடை செல்கிறது. இந்த ஓடையில் தொழிற்சாலைகளின் ராசாயன கழிவுநீர் கலந்து செல்கிறது. மேலும் தெருக்களில் கழிவுநீர் செல்வதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, ராசாயன கழிவுநீர் தெருக்களில் செல்லாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
கூட்டத்தில், சாலை விபத்தில் மரணமடைந்தவரின் குடும்பத்தினருக்கு, முதல்–அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் திவ்யதர்ஷினி வழங்கினார்.
முன்னதாக ராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன கட்டிடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் கலெக்டர் அலுவலகத்திற்காக மற்றொரு கட்டிடம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தை கலெக்டர் திவ்யதர்ஷினி நேற்று தொடங்கி வைத்தார்.
அப்போது ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத் உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story