தினக்கூலி ரூ.300 கேட்டு கொசு ஒழிப்பு பணியாளர்கள் மனு
போடி நகராட்சியில் தினக்கூலி ரூ.300 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கொசு ஒழிப்பு பணியாளர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
தேனி,
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி, மனுக்களை வாங்கினார். கூட்டத்தில் மொத்தம் 460 மனுக்கள் பெறப்பட்டன. 59 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். இக்கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது துரித விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில், பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மக்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்று தனித்தனியாக மனு அளித்தனர்.
இக்கூட்டத்தில் மனு அளிக்க போடி நகராட்சியில் பணிபுரியும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் சிலர் வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், ‘நாங்கள் தினக்கூலி பணியாளர்களாக வேலை பார்த்து வருகிறோம். எங்களுக்கு ரூ.213 தினக்கூலியாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ரூ.8 மட்டுமே கூலி உயர்வு வழங்கப்பட்டது. எனவே, விலைவாசி உயர்வின் அடிப்படையில் போடி நகராட்சியில் பணிபுரியும் கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு தினக்கூலி ரூ.300 என நிர்ணயம் செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
தேனி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை, தேனி மாவட்ட அனைத்து ஜமாத் கூட்டமைப்பு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாளை (புதன்கிழமை) மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த அனுமதி கேட்டு கோரிக்கை வைத்து இருந்தனர்.
Related Tags :
Next Story