ஊட்டி-கூடலூர் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன் - மின்கம்பத்தில் மோதிவிடாமல் பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்


ஊட்டி-கூடலூர் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன் - மின்கம்பத்தில் மோதிவிடாமல் பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்
x
தினத்தந்தி 17 Feb 2020 10:45 PM GMT (Updated: 17 Feb 2020 5:21 PM GMT)

ஊட்டி-கூடலூர் சாலையில் சுற்றுலா வேன் கட்டுப்பாட்டை இழந்தது. அது மின்கம்பத்தில் மோதிவிடாமல் பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.

கூடலூர்,

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து கூடலூர் வழியாக ஊட்டிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் சென்று வருகின்றன. கூடலூரில் இருந்து நடுவட்டம் வரை 18 மீட்டர் சாலை செங்குத்தான மலைப்பாதையாக உள்ளது. ஆனால் நடுவட்டம் முதல் ஊட்டி வரை சமதள சாலையாக உள்ளது. இதனால் ஊட்டியில் இருந்து கூடலூர் வழியாக வரும் வாகனங்கள் நடுவட்டம் வரை பாதுகாப்பாக வருகின்றன. ஆனால் நடுவட்டத்தில் இருந்து கூடலூருக்கு வரும்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கி விடுகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஊட்டியில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு சுற்றுலா வேன் சென்று கொண்டு இருந்தது. இரவு 8 மணிக்கு கூடலூர் ராஜகோபாலபுரம் வழியாக வந்தபோது, திடீரென சுற்றுலா வேன் கட்டுப்பாட்டை இழந்தது. தொடர்ந்து சாலையோரத்தில் உள்ள மின்கம்பத்தில் மோத முயன்றது. இதை கண்ட பொதுமக்கள் ஓடி வந்து, சுற்றுலா வேன் மின்கம்பத்தில் மோதாத வகையில் சக்கரத்தில் கற்களை போட்டு தடுத்து நிறுத்தினர். இதனால் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் சாலையில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விசாரணை நடத்தினர். தொடர்ந்து சுற்றுலா வேனில் ஏற்பட்டு இருந்த பழுது சரி செய்யப்பட்டது. அதன்பின்னர் சுமார் அரை மணி நேரத்துக்கு பிறகு பழுது நீக்கப்பட்டு சுற்றுலா வேன் அங்கிருந்து ஓட்டி செல்லப்பட்டது. மேலும் அந்த வழியே போக்குவரத்தும் சீரானது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, நடுவட்டம்-கூடலூர் சாலையில் 2-வது கியரில் வாகனங்களை ஓட்ட வேண்டும் என்று சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அந்த வழிமுறைகளை சிலர் பின்பற்றுவது இல்லை. இதனால் கட்டுப்பாட்டை இழந்து விபத்துகளில் சிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை கூடலூரில் அதிகரித்து வருகிறது. இனி வரும் நாட்கள் சீசன் தொடங்க உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் விதிமுறைகளை சரியாக பின்பற்ற போலீசார் அறிவுறுத்த வேண்டும் என்றனர்.

Next Story