தூத்துக்குடியில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு


தூத்துக்குடியில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 17 Feb 2020 10:15 PM GMT (Updated: 17 Feb 2020 5:36 PM GMT)

தூத்துக்குடியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார். அவர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

திருச்செந்தூர் பட்டர்குளம் தெருவை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், எங்கள் பகுதியை சேர்ந்த 117 பேருக்கு 2005-ம் ஆண்டு திருச்செந்தூரில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அந்த இடம் மிகவும் பள்ளமாக உள்ளது. இதனால் அங்கு தண்ணீர் தேங்கி முட்செடிகள் அடர்ந்து உள்ளது. சமீபத்தில் பெய்த மழையால் அங்கு மழைநீர் அதிக அளவில் தேங்கி கிடக்கிறது. இதனால் அங்கு வீடுகட்ட முடியாமல் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் அந்த இடத்தை சீர்செய்து சாலை, மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று கூறி இருந்தனர்.

கொடியன்குளத்தை சேர்ந்த கே.இந்திரா, ஐ.இந்திரா, வேலம்மாள், நாரைக்கிணறு பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வி ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் வந்து கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், எங்களின் கணவர்கள் 4 பேரும் மஸ்கட் நாட்டில் வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு அங்கு கடந்த பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் இந்தியா வரமுடியாமல் அங்கு தவித்து வருகிறார்கள். எனவே அவர்களை பத்திரமாக அழைத்து வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

தூத்துக்குடி சிலோன் காலனியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், நாங்கள் பல ஆண்டுகளாக இங்கு குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு 2008-ம் ஆண்டு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அதன்பின்னர் குடிசைமாற்று வாரியம் மூலம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை எங்கள் பெயருக்கு பட்டா கிடைக்கவில்லை. எனவே எங்கள் பெயரில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கூறி இருந்தனர்.

தூத்துக்குடி தட்டார் தெரு சேர்ந்த மாற்றுத்திறனாளி எட்மண்ட் கொடுத்த மனுவில், மாற்றுத்திறனாளியான நான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மாற்றுத்திறனாளிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு தொழில் தொடங்க விண்ணப்பித்து இருந்தேன். அதன்படி கடன்பெற மாவட்ட நிர்வாகம் சார்பில் தூத்துக்குடியில் உள்ள வங்கிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் வங்கி அதிகாரிகள் கடன் தருவதாக 7 மாதங்களாக கூறினர். தற்போது அவர்கள் கடன் தர மறுக்கிறார்கள். மாவட்ட நிர்வாகம் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறிஇருந்தார்.

தூத்துக்குடி மாவட்ட ஒடுக்கப்பட்டோர் உரிமை மீட்பு கூட்டமைப்பு சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், தூத்துக்குடி என்.டி.பி.எல். தொழிற்சாலையில் கடந்த 6 ஆண்டுகளாக தனியார் காண்டிராக்டரிடம் அருள்முருகன், பாலசந்தர், சுப்புராஜ் ஆகியோர் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்தனர். இவர்கள் 3 பேரும் ஒப்பந்த தொழிலாளர்கள் வாழ்வுரிமை சங்கத்தில் நிர்வாகிகளாக உள்ளதாலும், தொழிலாளர்கள் நலனுக்காக முறையிடுவதாலும் அந்த நிறுவன அதிகாரிகள் அவர்களை வேலையில் இருந்து நீக்கினர். எனவே மாவட்ட கலெக்டர் இந்த 3 தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பலர் கருப்பு சட்டை அணிந்து வந்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், குடும்பன், காலாடி, பண்ணாடி உள்ளிட்ட 7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்ற அரசாணையை வெளியிட வேண்டும் என்று தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். எனவே தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் விரைவில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று கூறி இருந்தனர்.தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க. சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் பட்டா மாறுதல் மற்றும் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யும் போது தவறாக சேர்க்கப்பட்ட பெயர்களை நீக்க கோரி வரும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் அலுவலர்கள் தமிழிலேயே கையெழுத்திட வேண்டும். வணிக நிறுவனங்கள் மற்றும் உணவகங்களில் வழங்கப்படும் ரசீதுகளை தமிழில் வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

குலையன்கரிசல் கிராம விவசாய சங்க நிர்வாக குழு கமிட்டியை சேர்ந்தவர்கள் கொடுத்த மனுவில், குலையன்கரிசல் பகுதியில் எரிவாயு குழாய் பதிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும் இதுதொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையை அனுகி உள்ளோம். நீதிமன்றம், தகுந்த சட்ட அறிவிப்பு இல்லாமல் விவசாய நிலத்தில் எரிவாயு குழாய் பதிக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆனால் தற்போது நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் குலையன்கரிசல் கிராம நிர்வாக அலுவலர் விவசாயிகளின் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டியுள்ளார். விவசாயிகளை அச்சுறுத்தும் எண்ணத்தில் அந்த நோட்டீசுகள் ஒட்டப்பட்டு உள்ளது. இதுகுறித்து நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளோம் என்று கூறி இருந்தனர்.

Next Story