சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து தூத்துக்குடி திரும்பிய 32 பேர் தொடர்ந்து கண்காணிப்பு - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து தூத்துக்குடி திரும்பிய 32 பேர் தொடர்ந்து கண்காணிப்பு - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 17 Feb 2020 11:00 PM GMT (Updated: 17 Feb 2020 6:27 PM GMT)

சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து தூத்துக்குடி திரும்பிய 32 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எதுவும் இல்லை. சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு சீனாவில் இருந்து வந்த கப்பலில் இருந்து மாலுமிகள் யாரும் கீழே இறங்கவில்லை. துறைமுகத்துக்கு வரும் அனைத்து கப்பல்களிலும் 100 சதவீதம் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த கப்பலில் வந்த மாலுமிகளுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாருக்கும் நோய் தாக்கம் அறிகுறிகள் இல்லை. அந்த கப்பல் கடந்த 16-ந் தேதி திரும்பி சென்று விட்டது. அந்த கப்பலால் தூத்துக்குடி மாவட்டத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை. அதே நேரத்தில் வெளிநாடுகளுக்கு சென்று திரும்பி வந்தவர்களை 14 நாட்கள் தொடர்ந்து கண்காணிக்க அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்று தூத்துக்குடிக்கு வந்த 32 பேரை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். எல்லோரும் நலமாக உள்ளனர். அவர்களுக்கு எந்தவித அறிகுறிகளும் இல்லை.

திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மண்டபத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 22-ந் தேதி திறந்து வைக்கிறார். இதையொட்டி விழா மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அந்த விழாவில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.18 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ள புற்றுநோய் சிகிச்சைக்கான கருவி தொடங்கி வைக்கப்படுகிறது. அதனை முதல்-அமைச்சர் அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று பார்க்க வாய்ப்பு உள்ளது.

ஒரு நாடு, ஒரு ரேஷன் கார்டு திட்டத்தில் கடந்த 15 நாட்களில் 1,887 ரேஷன் கார்டுதாரர்கள் வேறு கடைகளில் பொருட்களை பெற்று உள்ளனர். இவர்கள் 271 ரேஷன்கடைகளில் பொருட்களை வாங்கி உள்ளனர். அதே போன்று நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 36 பேர் தூத்துக்குடி மாவட்டத்தில் பொருட்களை வாங்கி உள்ளனர். இந்த திட்டத்தில் பெரிய பிரச்சினைகள் இல்லை. சில நெட்ஒர்க் கிடைக்காமல் இருப்பதாக புகார்கள் வந்தன. அதனை ஆய்வு செய்து, அந்த பகுதியில் நன்றாக கிடைக்கும் நெட்ஒர்க் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் ரூ.3 கோடியே 50 லட்சம் செலவில் பல்லுயிர் பெருக்க பூங்கா அமைக்க நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த பூங்காவில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து விதமான தாவரங்கள், மின்உற்பத்தி மாதிரிகள், நீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு மாதிரிகளும் வைக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story