குடிபோதையில் தகராறு செய்ததை தட்டிக்கேட்டதால் ஆட்டோ டிரைவர் வீட்டுக்கு தீ வைத்த வாலிபர்
செங்குன்றத்தில் குடிபோதையில் தகராறு செய்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரத்தில் ஆட்டோ டிரைவர் வீட்டுக்கு தீ வைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
செங்குன்றம்,
செங்குன்றம் நாரவாரிகுப்பம் இரட்டைமலை சீனிவாசன் தெருவைச் சேர்ந்தவர் தினேஷ்(வயது 24). இவருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வந்து அந்த தெருவில் உள்ளவர்களிடம் தகராறு செய்வது வழக்கம் என தெரிகிறது.
நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் குடித்துவிட்டு வந்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் தகராறு செய்துவந்தார். இதை பக்கத்து வீட்டைச்சேர்ந்த ஆட்டோ டிரைவர் நாகூர்மீரான் என்பவர் தட்டி கேட்டார். பின்னர் நாகூர் மீரான் குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.
தீ வைத்தார்
அப்போது நள்ளிரவு 1 மணியளவில் தினேஷ், நாகூர் மீரான் குடிசை வீட்டின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு ஓடியதாக கூறப்படுகிறது. வீடு தீப்பிடித்து எரிவதை கண்டு திடுக்கிட்டு எழுந்த நாகூர்மீரான், தனது மனைவி ரிஸ்வான் பர்வீன் மற்றும் கை குழந்தையுடன் வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்து உயிர் தப்பினார்.
இதுகுறித்து தகவல் அறிந்துவந்த செங்குன்றம் தீயணைப்பு நிலைய வீரர்கள் வீட்டில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் குடிசை வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும தீக்கிரையாகின. இதுபற்றி செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேசை கைது செய்தனர்.
Related Tags :
Next Story