தூத்துக்குடி அருகே எரிவாயு குழாய் பதிக்கும் பணியால் விவசாயத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை - ஐ.ஓ.சி.எல். அதிகாரி விளக்கம்
தூத்துக்குடி அருகே இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் பணியால் விவசாயத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தென் மண்டல ஐ.ஓ.சி.எல். நிறுவன தலைமை பொது மேலாளர் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி அருகே உள்ள குலையன்கரிசல் சுற்றுவட்டார பகுதிகள் வழியாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்(ஐ.ஓ.சி.எல்.) நிறுவனம் சார்பில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து விவசாயிகளிடம் அதிகாரிகள் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை தென் மண்டல ஐ.ஓ.சி.எல். நிறுவன தலைமை பொது மேலாளர் (குழாய்) தங்கராஜ் புதுக்கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி வரை 142 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.90 கோடி செலவில் இயற்கை எரிவாயு குழாய் பாதிக்கும் பணி நடந்து வருகிறது. இதுவரை ரூ.70 கோடி செலவில் 134 கிலோ மீட்டர் தூரம் குழாய் பதிக்கும் பணிகள் முடிவடைந்து உள்ளன. 53 வருவாய் கிராமங்கள் வழியாக இந்த குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. சில இடங்களில் வயல்களில் வரும் போது, விவசாயிகளுக்கு போதுமான இழப்பீடு கொடுக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி அருகே உள்ள குலையன்கரிசல், பொட்டல்காடு ஆகிய 2 கிராமங்கள் இடையே 8 கிலோ மீட்டர் தூரம் குழாய் பதிக்கப்படுகிறது. இந்த பணிகள் முடிவடைந்த பிறகு, தூத்துக்குடி நகருக்கும் எரிவாயு குழாய் மூலம் கொண்டு வரப்பட உள்ளது. மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த பணிகள் முடிவடைந்த பிறகு 3 மாதத்தில் அந்த பகுதியில் மீண்டும் விவசாயிகள் விவசாயம் செய்யலாம். இந்த பணி நடக்கும் போது, விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டாலும், சம்பந்தப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கி வருகிறோம்.
எரிவாயு குழாய் பதிப்பதால் எந்தவித பாதிப்பும் இல்லை. இதனால் மக்கள் அச்சப்பட வேண்டாம். இதில் பயன்படுத்தப்படும் குழாய் உலகத்தரம் வாய்ந்தது. 2005-ம் ஆண்டு முதல் குழாய் மூலம் பெட்ரோலியம் பொருட்களை கொண்டு சென்று வருகிறோம். கப்பல் மூலம் எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு கொண்டு வரப்படும் எரிவாயு, அங்கிருந்து குழாய் மூலம் அனைத்து நகரங்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.
இந்த குழாய்கள் பதிக்கப்பட்ட பிறகு, வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கப்படும். குடிநீர் குழாய் போன்று இந்த எரிவாயு குழாய் இணைப்பு வழங்கப்படும். மாதம் தோறும் பயன்படுத்தும் அளவு கணக்கெடுக்கப்படும். இதனால் சிலிண்டர்களை தவிர்க்க முடியும். இயற்கை எரிவாயு காரணமாக சுற்றுச்சூழல் மாசு ஏற்படாது. வருங்காலத்தில் எரிவாயு தவிர்க்க முடியாதது. ஆகையால் குழாய் மூலம் கொண்டு செல்வதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
இந்த திட்டத்தில் பயன்படுத்தப்படும் ஒரு கிலோ மீட்டர் குழாயின் விலை ரூ.75 லட்சம் ஆகும். இது பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட குழாய் ஆகும். இந்த குழாய் பதிக்கப்பட்ட பிறகு கம்ப்யூட்டர் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். குழாயின் உள்பகுதியில் ஏதேனும் சேதம் உள்ளதா என்று கேமரா மூலம் முன்கூட்டியே பரிசோதனை செய்யப்படும். சுமார் 60 ஆண்டுகளுக்கு குழாயில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
தமிழகத்தில் 2005-ம் ஆண்டு முதல் குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அசாமில் 1964-ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது. ஆகையால் மக்கள் எந்தவித அச்சமும் அடைய தேவை இல்லை. எங்கள் அதிகாரிகள் மாதம் தோறும் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். இந்த திட்டம் மூலம் மாசற்ற சுற்றுச்சூழல் உருவாக்கவும், சிறு தொழிற்சாலைகள் உருவாகவும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது, துணை பொது மேலாளர் கவுதமன், மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story