மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் முற்றுகை


மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 17 Feb 2020 10:00 PM GMT (Updated: 17 Feb 2020 7:22 PM GMT)

ராமநாதபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் குடிநீர் வசதி செய்துதரக்கோரி பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

ராமநாதபுரம், 

மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் பட்டணம்காத்தான் கிழக்குகடற்கரை சாலை குடிசைமாற்று வாரிய குடியிருப்போர் நலச்சங்கத்தை சேர்ந்த பொதுமக்கள் திரளாக வந்தனர். பின்னர் அவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் அரங்கில் அமர்ந்து முற்றுகையிட்டனர். பின்பு அவர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- ராமநாதபுரம் நகரில் குடியிருந்து வந்த எங்களுக்கு குடிசைமாற்று வாரியம் சார்பில் வீடுகட்டி மேற்கண்ட பகுதியில் வீடு ஒதுக்கீடு செய்து குடியமர்த்தினர்.

கடந்த 3 ஆண்டுகாலமாக அந்த குடியிருப்பில் வசித்து வருகிறோம். வீடு மட்டுமே கட்டி கொடுத்துள்ளனர். வேறு எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. குடிநீர் வசதி கோரி பலமுறை மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லை. இதனால் நாள் ஒன்றுக்கு ஒரு குடும்பத்திற்கு ரூ.100 கொடுத்து குடிநீர் பெற்று பயன்படுத்தி வருகிறோம். தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் இருட்டில் வசித்து வருகிறோம்.

அருகில் மதுக்கடை உள்ளதால், அங்கிருந்து மது அருந்தி வருபவர்கள் எங்கள் குடியிருப்பு பகுதியில் மதுஅருந்திவிட்டு பிரச்சினையில் ஈடு படுகின்றனர். இதனால் அங்கு குடியிருக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே எங்களுக்கு உடனடியாக குடிநீர், தெரு விளக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

கடலாடி அருகே உள்ள திருமாலுகந்தன் கோட்டை பகுதியை சேர்ந்த கிராமத்தினர் தங்கள் பகுதியில் உள்ளாட்சி தேர்தலில் தோல்வியடைந்த அண்ணன், தம்பி ஆகியோர் முன்விரோதம் கொண்டு கூலிப்படைகளை வைத்து கிராமத்தினரை மிரட்டுவது, தாக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நிர்வாகிகள், குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், தேவேந்திரகுலத்தான், வாதிரியார் ஆகிய உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்று அரசாணை வெளியிட வேண்டும் என்று கோரி மனு கொடுத்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Next Story