செஞ்சி அருகே துணிகரம், அடகு கடையில் ரூ.10 லட்சம் நகை-பணம் கொள்ளை
செஞ்சி அருகே தென்னை மரத்தில் பெண்ணை கட்டிப்போட்டு அடகு கடையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்துச்சென்ற 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
செஞ்சி,
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 49). இவர் வீட்டின் முன்பகுதியில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் அடகு கடையை பூட்டிவிட்டு, வீட்டில் குடும்பத்துடன் படுத்து தூங்கினார். வராண்டாவில் நாகராஜின் மாமியார் நாகம்மாள் (55) தூங்கிக்கொண்டிருந்தார்.
நள்ளிரவு 1 மணியளவில் 5 பேர் கொண்ட கும்பல், கிரில் கேட்டை உடைத்து நாகராஜின் வீட்டிற்குள் நுழைந்தது. அங்கு தூங்கிக்கொண்டிருந்த நாகம்மாள் சத்தம் போடாமல் இருக்க முதலில், அவரது வாயில் துணியை திணித்து. தொடர்ந்து அந்த கும்பல், அவரை தூக்கிக்கொண்டு வீட்டின் பின்புறத்தில் உள்ள தென்னை மரத்தில் கயிற்றால் கட்டிப்போட்டது.
பின்னர் அந்த கும்பல் அடகுகடை பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தது. அங்கு பீரோவில் இருந்த 28 பவுன் நகை, 2½ கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ.85 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை அந்த கும்பல் கொள்ளையடித்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.
இதனை தொடர்ந்து அந்த கும்பல், தென்னை மரத்தில் கட்டிப்போட்டிருந்த நாகம்மாளின் கட்டை அவிழ்த்தனர். மேலும் அவர்கள், நாங்கள் செல்லும் வரை கூச்சலிட கூடாது. மீறி கூச்சலிட்டால் கொலை செய்து விடுவோம் என்று கத்தியை காட்டி மிரட்டிவிட்டு, அந்த கும்பல் அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்று விட்டது.
இந்த அதிர்ச்சியில் இருந்து மீண்ட நாகம்மாள், வீட்டிற்கு சென்று நாகராஜனை எழுப்பி, நடந்த சம்பவத்தை கூறினார். இதனால் அவர், பதறியடித்துக்கொண்டு அடகு கடையை வந்து பார்வையிட்டார். இது பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு நீதிராஜ், இன்ஸ்பெக்டர் ஜீவராஜ் மணிகண்டன், சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி நாராயணன் மற்றும் போலீசார் கொள்ளை நடந்த அடகு கடைக்கு விரைந்து வந்து, பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் இந்த கொள்ளை வழக்கில் துப்பு துலக்குவதற்காக விழுப்புரத்தில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கொள்ளை நடந்த அடகு கடையை மோப்பமிட்ட அந்த நாய், சிறிது தூரம் வரை ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்களும் நேரில் வந்து கொள்ளை நடந்த அடகு கடையில் பதிவான மர்ம நபர்களின் கைரேகைகளையும், அவர்கள் விட்டுச்சென்ற சில தடயங்களையும் சேகரித்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அடகுகடையில் கொள்ளையடித்த 5 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story