இடத்தை அபகரித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


இடத்தை அபகரித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 17 Feb 2020 11:00 PM GMT (Updated: 17 Feb 2020 7:40 PM GMT)

இடத்தை அபகரித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்,

திண்டிவனம் கிடங்கல்-2 பகுதியை சேர்ந்தவர் சாரதி (வயது 55), விவசாயி. இவர் நேற்று காலை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்குள்ள நுழைவுவாயில் முன்பு வந்த அவர் திடீரென தான் கொண்டு வந்திருந்த பையில் இருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து திறந்து தன் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

இதை சற்றும் எதிர்பாராத அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று சாரதியை தடுத்து நிறுத்தி அவர் வைத்திருந்த மண்எண்ணெய் கேன் மற்றும் தீப்பெட்டியை பிடுங்கியதோடு அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.

அதன் பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில், எனக்கு சொந்தமான 5 சென்ட் இடத்தில் 4¼ சென்ட் இடத்தை அதே பகுதியை சேர்ந்த ஒருவர் அபகரித்து விட்டார். அவர் தற்போது அந்த இடத்தில் வீடு கட்டி வசித்து வருகிறார். இதை தட்டிக்கேட்டால் என்னையும், எனது குடும்பத்தினரையும் ரவுடிகள் மூலமாக மிரட்டுகிறார். இதுபற்றி திண்டிவனம் சர்வேயரிடம் முறையிட்டதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது அந்த நபர், மீதமுள்ள ¾ சென்ட் இடத்தையும் தரும்படி கேட்டு என்னை மிரட்டி வருகிறார். இதுபற்றி திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து என்னுடைய இடத்தை மீட்டுத்தர வேண்டும் என்றார். இதை கேட்டறிந்த போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததோடு கலெக்டர் அலுவலகம் முன்பு இதுபோன்ற அசம்பாவித செயலில் ஈடுபடக்கூடாது என்று எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தினால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story