செங்கல்பட்டு மாவட்டம் சதானந்தபுரம் ஏரியில் கிராம மக்களை அச்சுறுத்தும் முதலைகள் கலெக்டர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


செங்கல்பட்டு மாவட்டம் சதானந்தபுரம் ஏரியில் கிராம மக்களை அச்சுறுத்தும் முதலைகள் கலெக்டர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 18 Feb 2020 4:30 AM IST (Updated: 18 Feb 2020 1:39 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டம் சதானந்தபுரம் ஏரியில் கிடக்கும் முதலைகளால் கிராமமக்கள் அச்சப்படுகின்றனர். முதலையை பிடிக்க மாவட்ட கலெக்டரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் நெடுங்குன்றம் ஊராட்சியில் உள்ள சதானந்தபுரம் கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த ஏரியை ஒட்டி எம்.ஜி.ஆர்.பகுதி உள்ளது. இங்கு ஏராளமானவர்கள் வசித்து வருகின்றனர்.

இந்த ஏரியில் பொதுமக்கள் துணிகளை துவைத்து வருகின்றனர். மேலும் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மீன் பிடித்தும் வருகின்றனர். மேலும் சதானந்தபுரம் பகுதியில் உள்ள ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்கும் வரும் போது, இந்த ஏரியில் உள்ள நீரை குடிக்கிறது.

இந்த ஏரியில் பல வருடமாக 5-க்கும் மேற்பட்ட முதலைகள் சுற்றி வருகிறது. அடிக்கடி கரைப்பகுதிக்கு வரும் முதலைகள் எம்.ஜி.ஆர். நகர் பகுதி மக்களையும், கால்நடைகளையும் அச்சுறுத்தி வருகிறது.

மேலும் சில சமயங்களில் ஏரியில் இருந்து வெளிவந்து கரையோரம் உள்ள வீடுகளின் வாசலிலும் படுத்துக்கொள்கிறது. இதனால் கரையை ஒட்டியுள்ள எம்.ஜி.ஆர்.நகர் பகுதி மக்கள் தினமும் ஒருவித அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

இது குறித்து சதானந்தபுரம் பகுதி மக்கள் கூறும்போது:-

சதானந்தபுரம் ஏரியில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக முதலைகள் உலா வருகிறது. இந்த ஏரிக்கு அருகில் உள்ள வண்டலூர் பூங்காவில் இருந்து பிறந்த முதலைக்குட்டிகளை பறவைகள் இரைக்காக தூக்கிவரும் போது, ஏரிக்குள் முதலைக்குட்டிகள் தவறிவிழுந்துவிடுகிறது. அப்படி விழும் முதலைக்குட்டிகள் எப்போதும் தண்ணீர் நிரம்பி மீன்கள் அதிகளவில் இருக்கும் இந்த ஏரியில் வளர்ந்து விடுகிறது.

இந்த ஏரியில் உள்ள முதலைகளை பிடிப்பதற்காக கடந்த 10 வருடங்களுக்கு மேலாக வனத்துறை அதிகாரிகள், வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரிகள் ஆகியோரிடம் ஏற்கனவே பலமுறை மனுக்கள் தரப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரை சதானந்தபுரம் ஏரியில் சுற்றித்திரியும் முதலைகளை பிடிப்பதற்கு அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை, இரண்டு வாரங்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ்சிடம் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் சதானந்தபுரம் ஏரியில் உள்ள முதலைகளை பிடிக்க கோரிக்கை மனுவை தந்து உள்ளோம். புதிய மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்த்து காத்து இருக்கின்றோம். இவ்வாறு அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Next Story