மாமல்லபுரம் கடற்கரைச்சாலையில் சாலையில் நடுவே தடுப்புகள் அமைத்ததால் வாகன ஓட்டிகள் அவதி


மாமல்லபுரம் கடற்கரைச்சாலையில் சாலையில் நடுவே தடுப்புகள் அமைத்ததால் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 18 Feb 2020 4:15 AM IST (Updated: 18 Feb 2020 2:12 AM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரம் கடற்கரைச்சாலையில் சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். இதனால் 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரைச்சாலையில் மாமல்லபுரத்தில் இருந்து சென்னை செல்லும் சாலையில் இடது பக்கம் தமிழ்நாடு அரசு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்திற்கு சொந்தமான பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது.

மாமல்லபுரத்திற்கும், கோவளத்திற்கும் இடைப்பட்ட கிழக்குக்கடற்கரை சாலையில் இந்த ஒரு அரசு பெட்ரோல் பங்க் மட்டுமே உள்ளது. தனியார் பெட்ரோல் பங்க் எதுவும் கிடையாது.

இந்தநிலையில், சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட பொதுமக்கள் சுற்றி பார்த்துவிட்டு சர்வீஸ் சாலை வழியாக சென்று இந்த அரசு பெட்ரோல் பங்கில் பெட்ரோல், டீசல் நிரப்பி கொண்டு மீண்டும் இடது பக்கம் செல்வதற்காக சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரின் வளைவு வழியாக கடந்து சென்னை செல்வது வழக்கம்.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த தடுப்புச்சுவரின் அருகே உள்ள வளைவு பகுதியை போலீசார் இரும்பு தடுப்புகள் வைத்து அடைத்து விட்டனர்.

இதனால் இங்குள்ள பங்கில் பெட்ரோல் நிரப்பிக்கொண்டு செல்லும் சுற்றுலா பயணிகள் சிலர் வலது பக்கம் வழியாக தவறான பாதையில் தேவனரி வரை 2 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று அங்குள்ள வளைவு பகுதியை கடந்து சென்னை செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இதனால் கார்களில் செல்லும் பயணிகள் சிலர் விபத்துகளிலும் அடிக்கடி சிக்கி காயமடைகின்றனர்.

அதேபோல் சென்னையில் இருந்து கார்களில் வந்து கடற்கரை விடுதிகளில் தங்கும் சுற்றுலா பயணிகள் மீண்டும் சென்னை செல்ல மாமல்லன் சிலை அல்லது தேவனேரி வரை சென்று வளைவு பகுதிகளை கடந்து செல்ல வேண்டிய அவல நிலையும் உள்ளது.

எனவே மாமல்லபுரம் போக்குவரத்து போலீசார், சுற்றுலா வளர்ச்சிக்கழக பெட்ரோல் பங்க் அருகில் சாலையின் நடுவில் உள்ள வளைவுகளில் இரும்பு தடுப்புகளை அகற்றி மீண்டும் திறந்து வாகன போக்குவரத்துக்கு வழி ஏற்படுத்தி தரவேண்டும் என்று பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story