ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி ஊராட்சி மன்ற தலைவிக்கு கொலை மிரட்டல் போலீஸ்காரர் மீது பரபரப்பு புகார்


ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி ஊராட்சி மன்ற தலைவிக்கு கொலை மிரட்டல் போலீஸ்காரர் மீது பரபரப்பு புகார்
x
தினத்தந்தி 18 Feb 2020 4:15 AM IST (Updated: 18 Feb 2020 3:09 AM IST)
t-max-icont-min-icon

ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி ஊராட்சி மன்ற தலைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்க கோரி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பரபரப்பு புகார் கூறப்பட்டது.

சேலம்,

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ராமன் தலைமையில் நடந்தது. இந்த நிலையில் மேச்சேரி ஒன்றியம் மல்லிகுந்தம் ஊராட்சி மன்ற தலைவி செல்லம்மாள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.

அப்போது அவருடன் வந்த ஆதரவாளர்கள் சிலர், ‘ஊராட்சி மன்ற தலைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த போலீஸ்காரரை கைது செய்ய வேண்டும்’ என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய கோரிக்கை அட்டைகளை கைகளில் ஏந்தி வந்தனர். இதையடுத்து அந்த கோரிக்கை அட்டைகளை போலீசார் அவர்களிடம் இருந்து வாங்கி கொண்டனர்.

அதன்பிறகு ஊராட்சி மன்ற தலைவி செல்லம்மாள், கலெக்டர் ராமனை சந்தித்து பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த மனுவில், ‘நான் ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். இந்த நிலையில், எங்கள் பகுதியை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் எனது அலுவலகத்துக்கு வந்து, அவருடைய வீட்டு முன்பு இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி என்னிடம் கூறினார்.

இதுகுறித்து மனுவாக எழுதி கொடுங்கள் என்று அவரிடம் நான் கூறினேன். இதற்கு அவர், நான் ஒரு போலீஸ்காரர் மட்டுமன்றி அமைச்சர் ஒருவருக்கு நெருக்கமானவர் என்று கூறி என்னை ஆபாசமாக பேசி தாக்க முற்பட்டதுடன் கொலை மிரட்டலும் விடுத்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

சேலம் அம்மாபேட்டை வைத்திஉடையார் காடு பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன். இவர் கடந்த 2 ஆண்டு களாக கொடுத்த புகார் மனுக்களின் நகல்களை ஒரு அட்டை பெட்டியில் போட்டு கொண்டு அதை தலையில் சுமந்து வந்தார். இதை பார்த்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் இருந்து அந்த பெட்டியை வாங்கி கொண்டனர்.

பின்னர் அவர் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தார். அந்த மனுவில், ‘எனது வீட்டு பத்திரம் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தொலைந்து போனது. இதற்கு மாற்றுப்பத்திரம் வழங்க கோரி அதிகாரிகளிடம் கடந்த 2 ஆண்டுகளாக மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மருத்துவ செலவிற்காக எனது வீட்டை விற்கவோ, அடமானம் வைக்கவோ முடியவில்லை. எனவே மாற்று பத்திரம் வழங்க அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

Next Story