ஹாசன், விஜயாப்புரா, கார்வாரில் புதிய விமான நிலையம் கவர்னர் உரையில் அறிவிப்பு


ஹாசன், விஜயாப்புரா, கார்வாரில் புதிய விமான நிலையம்   கவர்னர் உரையில் அறிவிப்பு
x
தினத்தந்தி 18 Feb 2020 5:05 AM IST (Updated: 18 Feb 2020 5:05 AM IST)
t-max-icont-min-icon

ஹாசன், விஜயாப்புரா, கார்வாரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு, 

கர்நாடக சட்டசபையின் கூட்டு கூட்டம் நேற்று பெங்களூரு விதான சவுதாவில் நடைபெற்றது. இதில் கவர்னர் வஜூபாய் வாலா கலந்து கொண்டு பேசியதாவது:-

நம்ம கிராம-நம்ம ரஸ்தே’ திட்டத்தின் கீழ் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் ரூ.695 கோடி செலவில் 874 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2,452 கிராமங்களில் நில ஆவணங்களில் உள்ள சிக்கல்கள் தீர்க்கப்பட்டுள்ளன. தலித் மற்றும் பழங்குடியின மக்களின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு எனது அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இதற்காக ரூ.30 ஆயிரத்து 445 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தலித் மற்றும் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் தங்கி படிக்கும் விடுதிகளை மேம்படுத்த ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக பப்ளிக் பள்ளிகள்

பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் மற்றும் சிறுபான்மை வகுப்பை சேர்ந்த குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, கல்வி கடன், திறன் மேம்பாடு உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.4,762 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. தரமான கல்வி வழங்கும் நோக்கத்தில் 276 கர்நாடக பப்ளிக் பள்ளிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இங்கு 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கல்வி கற்பிக்கப்படுகிறது. குழந்தைகளின் உடலில் நீர் குறைபாட்டை போக்க பள்ளிகளில் ‘குடிநீர் பெல்’ அறிமுகம் செய்துள்ளோம். அரசு கல்லூரிகளில் படிக்கும் 1.70 லட்சம் மாணவிகளுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ராய்ச்சூர், யாதகிரி மாவட்ட குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்க ராய்ச்சூரில் புதிதாக பல்கலைக்கழகம் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ராய்ச்சூரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.ஐ.டி.) அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மத்திய-மாநில அரசுகளின் திட்டங்களின் மூலம் 33 ஆயிரம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை கர்நாடகத்தில் ரூ.71 ஆயிரத்து 475 கோடிக்கு தொழில் முதலீடுகள் வந்துள்ளன. இதன் மூலம் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் கர்நாடகம் 2-வது இடத்தில் உள்ளது. 2-ம், 3-ம் நிலை நகரங்களில் தொழில் தொடங்க வசதியாக புதிய தொழிற்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. எனது அரசு, கர்நாடக புத்தாக்க ஆணையம் அமைத்துள்ளது. புதுமைகளை கண்டுபிடித்தலுக்கு இந்த ஆணையம் உதவியாக இருக்கும்.

புதிய விமான நிலையம்

உயிரி மருத்துவத் துறையில் புதிய தொழில்களை ஈர்க்க முன்வரும் நிறுவனங்களுக்கு உதவ ‘பயோ-இன்குபேட்டர்’ (உயிரி-காப்பகம்) அமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் பெண்கள் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. பெண் குழந்தைகள் கற்பழிப்பு வழக்குகளை விசாரிக்க 17 சிறப்பு கோர்ட்டுகள் மற்றும் 14 விரைவு கோர்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. பெண் வக்கீல்களின் வசதிக்காக கோர்ட்டுகளில் தனி காத்திருப்பு அறைகள் அமைக்கப்படும்.

கர்நாடகத்தில் புதிய விமானங்களை அமைக்க எனது அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கலபுரகியில் அமைக்கப்பட்ட விமான நிலையத்தில் ஏற்கனவே விமான போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. பீதர் விமான நிலையத்திலும் விமான போக்குவரத்து சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது. சிவமொக்காவில் புதிய விமான நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஹாசன், விஜயாப்புரா, கார்வார் ஆகிய நகரங்களில் புதிய விமான நிலையம் அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு வஜூபாய் வாலா பேசினார்.

Next Story