கொடுவாய் அருகே, ஒரே இடத்தில் இரு தரப்பினருக்கு அரசு வீட்டுமனைப்பட்டா - குடியேறுவது யார்? என்பதில் குழப்பம்


கொடுவாய் அருகே, ஒரே இடத்தில் இரு தரப்பினருக்கு அரசு வீட்டுமனைப்பட்டா - குடியேறுவது யார்? என்பதில் குழப்பம்
x
தினத்தந்தி 18 Feb 2020 4:00 AM IST (Updated: 18 Feb 2020 5:30 AM IST)
t-max-icont-min-icon

கொடுவாய் அருகே ஒரே இடத்தில் இரு தரப்பினருக்கு அரசு சார்பில் வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட இடத்தில் யார் குடியேறுவது? என்றகுழப்பம் நிலவுகிறது. இதுகுறித்து இருதரப்பினரும் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து முறையிட்டனர்.

திருப்பூர், 

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமை தாங்கினார். பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்து முறையிட்டனர்.

காங்கேயம் சுற்றுப்புற பகுதிகளில் வீடில்லாமல் வசித்து வந்தவர்களுக்கு கடந்த 2000-ம் ஆண்டில் கொடுவாய் அருகே நிழலி கிராமத்தில் 440 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது. ஆனால் பட்டா பெற்றவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அந்த இடத்தில் குடியேறவில்லை என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அந்த பட்டாவை ரத்து செய்து திருப்பூர் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் 220 பேருக்கு நிழலி கிராமத்தில் அதே இடத்தில் அரசு சார்பில் வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது.

புதிதாக பட்டா பெற்றவர்கள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று நிலத்தை சுத்தம் செய்தபோது, கடந்த 2000-ம் ஆண்டில் பட்டா பெற்றவர்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் குடிசை போட்டுள்ளனர். இதனால் சம்பந்தப்பட்ட இடத்தில் யார் குடியிருப்பது என்ற குழப்பம் நிலவி வருகிறது.

இந்தநிலையில் 2000-ம் ஆண்டு பட்டா பெற்ற நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். சம்பந்தப்பட்ட இடத்தில் தாங்கள் வீடு கட்ட பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு ஆணை வழங்க வேண்டும் என்று மனு கொடுத்தனர்.

இது ஒரு புறம் இருக்க 2014-ம் ஆண்டு பட்டா பெற்றவர்களும் நேற்று மனு கொடுத்தனர். அதில் அரசு வழங்கிய பட்டா நிலத்தில் ஏற்கனவே பட்டா பெற்றவர்கள் குடியேறி இருப்பதால் தங்களுக்கு மாற்று இடம் அல்லது அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். அந்தவகையில் இருதரப்பினரும் மாறி, மாறி மனு கொடுத்துள்ளனர்.

தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் தலைவர் காளிமுத்து தலைமையில் காங்கேயம் தாலுகா வட்டமலைக்கிராமம் அவனாசிபுதூர் பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் பகுதியில் யூ.சி.எஸ். என்ற கரித்தொட்டி(கார்பன்) தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு இருந்து கழிவுநீரை பூமிக்கு அடியில் செலுத்துவதால் நிலத்தடி நீர் மாசுபட்டு பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர். கிணற்று நீர் மாசுபட்டுள்ளதால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலம் பாழ்பட்டுள்ளது. இந்த தொழிற் சாலையில் இருந்து வெளிவரும் கரும்புகையினால் தென்னை மரத்தின் மீது கரும்புகை படிந்து காய்ப்பு இழந்து காணப்படுகிறது.

மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வந்து ஆய்வு செய்த பின்னரும் இதுவரை அந்த தொழிற்சாலை இயங்கி வருகிறது. எனவே கரித்தொட்டி தொழிற்சாலையை நிரந்தரமாக மூட அதிகாரிகள் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

நாம் தமிழர் கட்சி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பில் அளித்த மனுவில், திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும் கியாஸ் ஏஜென்சிகளில் வேலை பார்க்கும் கியாஸ் சிலிண்டர் வினியோகிக்கும் கூலி தொழிலாளர்களுக்கு அரசால் ஒரு சிலிண்டருக்கு ரூ.46 வழங்கப்படுகிறது.

இந்த தொகையை பல ஏஜென்சிகள் முறையாக வழங்குவதில்லை. இதனால் தொழிலாளர்கள் நுகர்வோர்களிடம் பணம் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே தொழிலாளர்களின் நலன் கருதி அரசால் வழங்கப்படும் ரூ.46-ஐ பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

நேற்று நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 385 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ஒருவருக்கு நவீன செயற்கை கால், ஒருவருக்கு ஈமச்சடங்கு உதவித்தொகை, ஒருவருக்கு மூன்று சக்கர சைக்கிள், பல்லடம், தாராபுரம், காங்கேயம், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, மடத்துக்குளம் தாலுகா பகுதியை சேர்ந்த 31 பேருக்கு முதியோர் உதவித்தொகை என மொத்தம் 34 பேருக்கு ரூ.4 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஜயகார்த்திகேயன் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் விமல்ராஜ், மாவட்ட வழங்கல் அதிகாரி முருகன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

Next Story