வீராம்பட்டினம் கடற்கரையில் சிமெண்டால் ஆன பாய்மர கப்பல் கட்டுமானப் பணி தீவிரம்


வீராம்பட்டினம் கடற்கரையில் சிமெண்டால் ஆன பாய்மர கப்பல் கட்டுமானப் பணி தீவிரம்
x
தினத்தந்தி 18 Feb 2020 5:49 AM IST (Updated: 18 Feb 2020 5:49 AM IST)
t-max-icont-min-icon

வீராம்பட்டினம் கடற்கரையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சிமெண்டால் ஆன பாய்மர கப்பல் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

அரியாங்குப்பம்,

புதுச்சேரி அரசு சுற்றுலா துறையானது சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடற்கரையையொட்டி உள்ள பல்வேறு இடங்களில் பூங்கா, உணவகங்கள், நடைபயிற்சி இடம், இசை கச்சேரிக்காக திறந்தவெளி மேடை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கடற்கரை மேம்பாடு திட்ட பணிகள் நடந்து வருகின்றன.

அதன்படி அரியாங்குப்பத்தை அடுத்த வீராம்பட்டினம் -அரிக்கன்மேடு பகுதியை இணைக்கும் இடத்தில் சுற்றுலா துறை சார்பில் அரிக்கன்மேடு அருங்காட்சியகம், ரோமன் நாட்டு கப்பல் போக்கு வரத்தை நினைவுப்படுத்தும் வகையில் பாய்மர கப்பல் கட்டுவது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி சிமெண்டால் பாய்மர கப்பல் கட்டும் பணி கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. இடையில் தொய்வு ஏற்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இந்த பணிகள் தொடங்கி தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்த கப்பலை பாரதியார் பல்கலைக்கூட நுண்கலை துறை உதவி பேராசிரியர் ராஜராஜன் தலைமையிலான குழுவினர் வடிவமைத்து வருகிறார்கள். இதுபற்றி உதவி பேராசிரியர் ராஜராஜன் கூறியதாவது:-

வீராம்பட்டினம் கடற்கரையில் பெரிய அளவில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான திடல், பார்வையாளர்கள் அமர்ந்து பார்ப்பதற்கான காலரி, உணவுக் கூடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ரோமானியர் கால பாய்மர கப்பல் கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. இந்த கப்பல் முழுவதும் சிமெண்டினால் கட்டப்பட்டுள்ளது.

இந்த பாய்மர கப்பல் 14 அடி அகலம், 58 அடி நீளம் கொண்டதாகும். இதில் 20 பேர் வரை ஏறி நிற்கலாம். இந்த கப்பலின் முகப்பில் அன்னப் பறவை போன்று வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த அன்னப்பறவை சுமார் 300 கிலோ எடை கொண்டதாகும். மேலும் போர் வீரர்கள் குதிரையில் செல்வது போன்ற சிற்பமும் அமைக்கப்பட்டு உள்ளது.

கடந்த 8 மாதங்களாக இந்த பணிகள் நடந்து வருகின்றன. நுண்கலைத்துறை மாணவர்கள் மற்றும் தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் கப்பலை கட்டமைத்து வருகின்றனர். விரைவில் சுற்றுலா துறை சார்பில் பொதுமக்களின் பார்வைக்காக இந்த கப்பல் அர்ப்பணிக்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story