குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி - தஞ்சையில், முஸ்லிம்கள் தொடர் போராட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி தஞ்சையில் முஸ்லிம்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சாவூர்,
குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தமிழகஅரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த தடியடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்திய போலீசாரை பணி நீக்கம் செய்து அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருங்கிணைந்த முஸ்லிம்கள் கூட்டமைப்பு சார்பில் தஞ்சை கீழவாசல் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள பள்ளிவாசல் முன்பு 3-வது நாளாக நேற்று போராட்டம் நடந்தது.
இதற்கு கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் முகமதுஅப்பாஸ் தலைமை தாங்கினார். இந்தநிலையில் கூட்டமைப்பு நிர்வாகிகளை போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், தினமும் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை போராட்டம் நடத்துங்கள். இரவு நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என வலியுறுத்தினார். அதன்படி நேற்றுஇரவு 7 மணிக்கு போராட்டம் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. திடீரென துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் கூடுதல் போலீசாரும் வரவழைக்கப்பட்டனர். போராட்ட பந்தலுக்கு முஸ்லிம்கள் அதிகஅளவில் வர தொடங்கினர்.
இதையடுத்து ஒலிபெருக்கியில் பேசிய நிர்வாகி ஒருவர், சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால் எங்கள் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படவில்லை. அதுமட்டுமின்றி சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வர முடியாது என சொல்லிவிட்டனர். இதனால் போலீஸ் சூப்பிரண்டிடம் போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறி தொடர் போராட்டத்தில் ஈடுபட போகிறோம். போலீசாருடன் ஒப்பந்தம் செய்த ஒருங்கிணைந்த முஸ்லிம்கள் கூட்டமைப்பு கலைக்கப்படுகிறது என்றார்.
பின்னர் கூட்டமைப்பு பெயரில் வைக்கப்பட்ட பேனர் உடனடியாக அகற்றப்பட்டது. இரவு, பகலாக எங்கள் போராட்டம் மக்கள் போராட்டமாக நடைபெறும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story