நாகை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு: பெண் உள்பட 2 பேர் தீக்குளிக்க முயற்சி
நாகை கலெக்டர் அலுவலகத்தில் பெண் உள்பட 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக 32 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது மகளுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது திடீரென மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வேளாங்கண்ணி பூக்காரத்தெருவை சேர்ந்த மேரி என்பது தெரியவந்தது. பின்னர் அவர் போலீசாரிடம் ஒரு மனு அளித்தார்.
அதில் கூறியிருப்பதாவது:-
இடம் கொடுக்க வேண்டும்
எனது கணவர் இறந்து விட்டார். நான் எனது மகளுடன் வேளாங்கண்ணி பூக்காரத்தெருவில் வசித்து வருகிறேன். நாங்கள் வீடு கட்டி கொள்ள இடம் கேட்ட போது மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவின் பேரில் வருவாய் ஆய்வாளர் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பூக்காரத்தெரு ரேஷன் கடை அருகே இடத்தை ஒதுக்கி கொடுத்தார். அந்த இடத்தில் நாங்கள் குடிசை போட்டு வசித்து வருகிறோம். இந்நிலையில் வேளாங்கண்ணி பேரூராட்சி அதிகாரிகள் அந்த இடம் குப்பைகள் கொட்டும் இடம் என்று கூறி குடிசை போடவிடாமல் தடுத்து வருகின்றனர். இதனால் நானும், எனது மகளும் எங்கு சென்று வசிப்பது என்று தெரியவில்லை. எனவே வாழ்வதற்கு இடம் கொடுக்க வேண்டும். இல்லையெனில் இறப்பதற்கு அனுமதி கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நடவடிக்கை
நாகை அருகே விழுந்தமாவடி மீனவர் காலனியை சேர்ந்தவர் வேலு. இவர் தனது மனைவி விஜயலட்சுமி மற்றும் குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தார். அப்போது கையில் வைத்திருந்த கேனை எடுத்து அதில் இருந்த டீசலை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்தவுடன் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து வேலு போலீசாரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, கட்டபஞ்சாயத்து செய்து எனது குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பெண் உள்பட 2 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் நாகை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story