அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா; 21–ந் தேதி நடக்கிறது


அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா;  21–ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 18 Feb 2020 10:00 PM GMT (Updated: 18 Feb 2020 12:45 PM GMT)

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா வருகிற 21–ந் தேதி நடக்கிறது.

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக உள்ளது. இந்த கோவிலில் கார்த்திகை தீபம் உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் நடைபெறுகிறது. மேலும் இக்கோவில் மகா சிவராத்திரி உருவான திருத்தலம் என்ற தனிச்சிறப்பும் பெற்றது.

அதாவது திருமாலும், பிரம்மாவும் சிவபெருமானின் அடி, முடி காணாமல் திகைத்த போது அவர் லிங்கோத்பவ மூர்த்தியாக அருள்பாலித்த திருநாளே மகா சிவராத்திரி என்று கூறப்படுகிறது. இதனை உணர்த்தும் வகையில் இக்கோவிலில் சாமி கருவறைக்கு பின்புறம் லிங்கோத்பவர் திருவுருவம் அமைய பெற்று உள்ளது.

இந்த ஆண்டிற்கான மகா சிவராத்திரி விழா வருகிற 21–ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

விழாவை முன்னிட்டு அன்று காலை 5 மணி முதல் லட்சார்ச்சனை நடைபெறுகிறது. பின்னர் இரவு 7.30 மணிக்கு முதல் கால பூஜையும், இரவு 11.30 மணிக்கு 2–ம் கால பூஜையும், இரவு 2.30 மணிக்கு 3–ம் கால பூஜையும், அதிகாலை 4.30 மணிக்கு 4–ம் கால பூஜையும் நடைபெற உள்ளது.

மேலும் மகா சிவராத்திரியின் முக்கிய நிகழ்வாக நள்ளிரவு 12 மணியளவில் லிங்ககோத்பவமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற உள்ளது. மேலும் கோவிலில் பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். அதுமட்டுமின்றி ஏராளமான பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் செல்வார்கள்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் தலைமையிலான அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

Next Story