முதல்- அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்


முதல்- அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்
x
தினத்தந்தி 18 Feb 2020 10:30 PM GMT (Updated: 18 Feb 2020 2:28 PM GMT)

முதல்- அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட கலெக்டர் சாந்தா தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர், 

முதல்- அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் டாக்டர் எம்.ஜி.ஆர். விளையாட்டு வளாகத்தில் நேற்று தொடங்கியது. 2 நாட்கள் நடக்கும், இந்த விளையாட்டு போட்டிகளை மாவட்ட கலெக்டர் சாந்தா தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் விளையாட்டு வீரர்- வீராங்கனைகளை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழக அரசால் 2011-12-ம் ஆண்டு முதல் முதல்- அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தமிழக முதல்- அமைச்சரால் விளையாட்டு துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், பல்வேறு விளையாட்டு கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியும், சர்வதேச அளவில் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்- வீராங்கனைகளுக்கு நிதி உதவிகள் வழங்கியும் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவிலேயே எந்தவொரு மாநிலத்திலும் வழங்கபடாத அளவிற்கு மாநில அளவிலான போட்டிகளுக்கு மிக அதிகமாக தனிநபர் ஒருவருக்கு பரிசு தொகையாக ரூ.1 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 2 மற்றும் 3-ம் இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.75 ஆயிரம் மற்றும் ரூ.50 ஆயிரம் வீதம் வழங்கப்படுகிறது.

மேலும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெறுபவர்களுக்கு பள்ளி அளவில் ரூ.10 ஆயிரமும், கல்லூரி அளவில் ரூ.13 ஆயிரமும் பரிசு தொகையாக தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ.2 கோடி பரிசு தொகையும், 2-ம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு தொகையும், 3-ம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசு தொகையும் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. அதேபோல் காமன்வெல்த், ஆசிய மற்றும் தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்- வீராங்கனைகளுக்கும் அதிகபட்ச அளவிலான பரிசு தொகைகளும் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

எனவே விளையாட்டு போட்டிகளில் ஆர்வமுடைய இளைஞர்கள் அனைவரும் இவ்விளையாட்டு அரங்கில் அமையப்பெற்றுள்ள சர்வதேச தரத்திலான நீச்சல் குளம், பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கம், கூடைப்பந்து, வாலிபால், கபடி உள்ளிட்ட ஆடுகளங்களை முறையாக பயன்படுத்திக்கொண்டு மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று நடைபெற்ற முதல்- அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் ஓட்டப்பந்தயம், கால்பந்து, கைப்பந்து உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகளிடையே 10 வகையான போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்- வீராங்கனைகள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்- வீராங்கனைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

இதில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மதிவாணன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பாபு, பெண்கள் விளையாட்டு விடுதி மேலாளர் ஜெயகுமாரி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் தடகள பயிற்சியாளர் கோகிலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story