கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று திருச்சி வருகை


கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று திருச்சி வருகை
x
தினத்தந்தி 18 Feb 2020 10:15 PM GMT (Updated: 18 Feb 2020 3:08 PM GMT)

சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று வருகையையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருச்சி, 

திருச்சி-திண்டுக்கல் சாலையில் உள்ள தேசிய கல்லூரியில் நடக்கும் கல்வி மாநாட்டில் பங்கேற்பதற்காக, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று(புதன் கிழமை) திருச்சி வருகிறார். அதற்காக இன்று காலை 10.40 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு மதியம் 12 மணிக்கு வந்தடைகிறார். அவருக்கு, விமான நிலையத்தில் மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு, மாநகர போலீஸ் கமி‌‌ஷனர் வரதராஜூ உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார்கள். பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்படும் கவர்னர், திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் அருகே உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். பிற்பகல் 1 மணிக்கு காரில் புறப்பட்டு, விழா நடக்கும் கல்லூரிக்கு செல்கிறார். அங்கு கல்லூரி மாநாட்டை தொடங்கி வைத்து பேசி விட்டு, அதன் பின்னர் மீண்டும் விருந்தினர் மாளிகைக்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். பின்னர் மாலை 4.30 மணிக்கு திருச்சி விமானம் நிலையம் செல்லும் கவர்னர், அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

கவர்னர் திருச்சி வருகையையொடி, மாநகரில் போலீஸ் கமி‌‌ஷனர் வரதராஜூ தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமானம் நிலையம் முதல் டி.வி.எஸ். டோல்கேட்டில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை வரையிலும், விருந்தினர் மாளிகை முதல் விழா நடக்கும் கல்லூரி வரையிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் படுகிறார்கள்.

திருச்சியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்றைய தினம் முஸ்லிம் அமைப்புகள் திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாகவும் அறிவித்துள்ளனர். எனவே, கவர்னர் வருகையின்போது அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் ஏற்படாத வகையில் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Next Story