அரசு பொதுத்தேர்வுகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் மார்ச் மாதம் தொடங்க உள்ள அரசு பொதுத்தேர்வுகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
புதுக்கோட்டை,
கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் உமா மகேஸ்வரி பேசுகையில், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகள் வருகிற மார்ச் மாதம் 27-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 13-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இத்தேர்வினை மாவட்டத்தில் 111 தேர்வு மையங்களில் மொத்தம் 22 ஆயிரத்து 709 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர். இதேபோல 11-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் வருகிற மார்ச் மாதம் 4-ந் தேதி முதல் தொடங்கி 26-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இத்தேர்வினை 84 தேர்வு மையங்களில் 19 ஆயிரத்து 616 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். மேலும் பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் வருகிற மார்ச் மாதம் 2-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வினை 84 தேர்வு மையங்களில் 19 ஆயிரத்து 157 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர்.
குறிப்பாக அரசு பொதுத் தேர்வின் போது முறைகேடுகள் ஏதும் நிகழாத வகையில் அனைத்து தேர்வு மையங்களுக்கும் தனித்தனி கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டு உள்ளதுடன், 25 பறக்கும் படைகளும் அமைக்கப்பட உள்ளது. தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள்களை பாதுகாப்பாக வைக்கும் வகையில் 4 விடைத்தாள் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது, என்றார்.
கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விஜயலட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர்கள் ராஜேந்திரன், திராவிடச்செல்வம், ராஜேந்திரன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story