வார்டுகள் மறுவரையறை வரைவு பட்டியல் ; கலெக்டர் வெளியிட்டார்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வார்டுகள் மறுவரையறை வரைவு பட்டியலை கலெக்டர் திவ்யதர்ஷினி வெளியிட்டார்.
ராணிப்பேட்டை,
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டதற்கான வரைவு பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கி வார்டுகள் மறுவரையறை வரைவு பட்டியலை வெளியிட்டார். அதனை ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் பெற்று கொண்டனர்.
அப்போது மாவட்ட ஊராட்சி செயலாளர் சிவராம்குமார் உள்பட நகராட்சி, பேரூராட்சிகளின் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
பின்னர் கலெக்டர் திவ்யதர்ஷினி கூறியதாவது:-
வார்டுகள் மறுவரையறை பணி முடிவடைந்து வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்மீது பொதுமக்களுக்கும், அரசியல் கட்சியினருக்கும் ஏற்படும் ஆட்சேபனைகள் மற்றும் கருத்துக்களை தெரிவிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பொன்னை மற்றும் சுற்றியுள்ள சில கிராமங்களை சேர்ந்தவர்கள் தங்களை ராணிப்பேட்டை மாவட்டத்தில் இணைக்க வேண்டும் என எழுப்பியுள்ள கோரிக்கை குறித்து கேட்டதற்கு, அவை வேலூர் மாவட்டத்தில் உள்ளன. வேலூர் கலெக்டர் தான் இது குறித்து முடிவெடுக்க முடியும் என கலெக்டர் கூறினார்.
Related Tags :
Next Story