டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப திறப்பு விழாவுக்கான மேடை அமைக்கும் பணி அமைச்சர் கடம்பூர் ராஜூ பார்வையிட்டார்
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப திறப்பு விழாவுக்கான மேடை அமைக்கும் பணியை அமைச்சர் கடம்பூர் ராஜூ பார்வையிட்டார்.
திருச்செந்தூர்,
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப திறப்பு விழாவுக்கான மேடை அமைக்கும் பணியை அமைச்சர் கடம்பூர் ராஜூ பார்வையிட்டார்.
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்பு விழா
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா வருகிற 22–ந்தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. விழாவில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை திறந்து வைத்து, அவரது முழுஉருவ வெண்கல சிலையையும் திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து மணிமண்டபம் அருகில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெறும் விழாவில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியும், தூத்துக்குடி மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், விழா பேரூரை நிகழ்த்துகிறார். விழாவை முன்னிட்டு, அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பிரமாண்ட பந்தல், மேடை மற்றும் அலங்கார வளைவுகள், மின்விளக்கு அலங்காரம் போன்றவை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று மாலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
வரலாற்று சிறப்புவாய்ந்த விழாவாக...
திருச்செந்தூரில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப திறப்பு விழாவானது வரலாற்று சிறப்புவாய்ந்த பிரமாண்ட விழாவாக நடைபெற உள்ளது. துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபத்தை திறந்து வைத்து, அவரது முழுஉருவ வெண்கல சிலையையும் திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து ஆயிரக்கணக்கானவர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கியும், தூத்துக்குடி மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் முப்பெரும் விழாவாக நடைபெறுகிறது. இந்த விழாவில் லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொள்வார்கள். இந்த விழா தூத்துக்குடி மாவட்டத்தின மைல் கல்லாக சிறப்பு வாய்ந்த விழாவாக அமையும். விழாவில் பொதுமக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பல்வேறு புதிய அறிவிப்புகளையும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கின்றார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
கலந்து கொண்டவர்கள்
அவருடன் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் எம்.எல்.ஏ., திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா, தாசில்தார் ஞானராஜ், மண்டல துணை தாசில்தார் கோபால், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார், திருச்செந்தூர் காந்தி தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் பழக்கடை திருப்பதி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், நகர செயலாளர் மகேந்திரன், கூட்டுறவு சங்க தலைவர்கள் கோட்டை மணிகண்டன், பூந்தோட்டம் மனோகரன், திருச்செந்தூர் யூனியன் துணை தலைவர் ரெஜிபர்டு பர்னாந்து, தொழில் அதிபர் சுதர்சன் வடமலை பாண்டியன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story