கூடலூரில்: சேற்றில் சிக்கி உயிரிழந்த குட்டி யானையின் உடலை கண்ணீருடன் பாதுகாக்கும் தாய் யானை


கூடலூரில்: சேற்றில் சிக்கி உயிரிழந்த குட்டி யானையின் உடலை கண்ணீருடன் பாதுகாக்கும் தாய் யானை
x
தினத்தந்தி 19 Feb 2020 4:30 AM IST (Updated: 18 Feb 2020 10:20 PM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் சேற்றில் சிக்கி உயிரிழந்த குட்டி யானையின் உடலை தாய் யானை கண்ணீருடன் 2-வது நாளாக பாதுகாத்து வருகிறது. இதனால் உடலை மீட்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

கூடலூர், 

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் வனவிலங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புலிகள், சிறுத்தைப்புலிகள் இரவில் ஊருக்குள் புகுந்து கால்நடைகளை கொன்று வருகிறது. காட்டு யானைகள் பசுந்தீவனங்களை தேடி விவசாய நிலங்களை தேடி வருகிறது. கூடலூர் நகராட்சி மற்றும் தேவர்சோலை பேரூராட்சி எல்லைகள் இணையும் பகுதியான கோழிப்பாலம் அருகே கொச்சுக்குன்னு பகுதியில் கடந்த 17-ந் தேதி காட்டு யானைகளின் பிளிறல் சத்தம் அதிகாலை முதல் கேட்டது.

இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் சத்தம் வந்த இடத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது தனியார் தேயிலை தோட்டத்துக்கும், அடர்ந்த வனத்துக்கும் இடைப்பட்ட பள்ளத்தாக்கான பகுதியில் சதுப்பு நிலத்தில் 3 காட்டு யானைகள் நின்றிருந்தது. அதில் ஒரு யானை கண்ணீருடன் புதர்களுக்கு இடையே நின்றிருந்தது. மேலும் அதன் அருகே சேற்றில் சிக்கி புதைந்த நிலையில் குட்டி யானை ஒன்று இறந்து கிடந்தது.

இதனிடையே காட்டு யானைகள் பொதுமக்களை திடீரென துரத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் வனச்சரகர் ராமகிரு‌‌ஷ்ணன் தலைமையில் வன காப்பாளர்கள் பிரகா‌‌ஷ், பிரதீப் உள்ளிட்ட வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது வனத்துறையினரின் வாகனத்தை தாய் காட்டு யானை ஆக்ரோ‌‌ஷமாக துரத்தியது. இதனால் வனத்துறையினரால் குட்டி யானையின் உடல் கிடக்கும் இடத்தின் அருகே செல்ல முடியவில்லை. தொடர்ந்து பட்டாசுகளை வெடித்தனர். இருப்பினும் எந்த பயனும் ஏற்படவில்லை. இரவு முழுவதும் குட்டியின் உடல் அருகே தாய் யானை நின்று விட்டு மறுநாள் சென்று விடும் என வனத்துறையினர் எதிர்பார்த்தனர். இதைத்தொடர்ந்து தாய் உள்பட 3 காட்டு யானைகளை விரட்டும் முடிவை வனத்துறையினர் கைவிட்டனர். மாலை 6 மணி வரை வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணித்தனர். பின்னர் அங்கிருந்து சென்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை 6 மணிக்கு வனத்துறையினர் மீண்டும் அப்பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது இறந்த குட்டி யானையின் உடல் அருகே தாய் காட்டு யானை கண்ணீருடன் நின்று பாதுகாத்து கொண்டிருந்தது. மேலும் வனத்துறையினரை துரத்த தொடங்கியது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து கூடலூர் உதவி வன பாதுகாவலர் விஜயன், வனச்சரகர்கள் ராமகிரு‌‌ஷ்ணன், கணேசன் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்தனர். அப்போது வனம் மற்றும் தேயிலை தோட்டத்துக்கு இடையே குட்டி யானையின் உடல் அருகே தாய் யானை நிற்பதால் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லை. பட்டாசுகளை வெடித்து விரட்டினால் ஆத்திரத்தில் ஊருக்குள் புகுந்து தாய் காட்டு யானை பொதுமக்களை தாக்கும் அபாயம் உள்ளது. இதனால் குட்டியின் உடலை விட்டு தாய் யானை இயல்பாக வேறு இடத்துக்கு செல்லும் வரை காத்திருக்க வனத்துறையினர் முடிவு செய்து உள்ளனர்.

சேற்றில் சிக்கி உயிரிழந்த குட்டி யானையின் உடலை தாய் யானை கண்ணீருடன் 2-வது நாளாக பாதுகாத்து வருவதால் அதன் உடலை மீட்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். மேலும் நள்ளிரவு நேரத்தில் குட்டி யானையின் உடலை செந்நாய்கள் கூட்டம் கடித்து தின்றிருப்பது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து உதவி வன பாதுகாவலர் விஜயன் கூறியதாவது:-

சதுப்பு நிலத்தில் உள்ள சேற்றில் குட்டி யானை சிக்கி உள்ளது. இதை கண்ட தாய் யானை குட்டியை மீட்க பல்வேறு கட்டமாக போராடி உள்ளது. இறுதியாக குட்டி யானை சேற்றில் புதைந்து உயிரிழந்துள்ளது. இதனால் குட்டியை இழந்ததால் தாய் யானை ஆக்ரோ‌‌ஷமாக உள்ளது. யாரும் அருகே செல்ல முடியவில்லை. மேலும் பாதுகாப்பு கருதி தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்கள் பணியாற்ற வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இறந்த குட்டி யானையின் உடலில் இருந்து இயற்கையாக துர்நாற்றம் வந்த பிறகு தாய் யானை அங்கிருந்து சென்று விடும். தற்போது மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் நிற்பதால் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லை. இதனால் தாய் யானையை விரட்டாமல் கண்காணித்து வரப்படுகிறது. தானாக தாய் யானை அங்கிருந்து சென்ற பிறகு குட்டி யானையின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story