திருப்போரூர் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு அடி-உதை


திருப்போரூர் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு அடி-உதை
x
தினத்தந்தி 18 Feb 2020 10:15 PM GMT (Updated: 18 Feb 2020 5:28 PM GMT)

திருப்போரூர் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு அடி-உதை விழுந்தது.

திருப்போரூர்,

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த மேலக்கோட்டையூர் போலீஸ் தங்கும் விடுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குடியிருப்பில் மதுபோதை பொருள், கஞ்சா உள்ளிட்டவை அதிகமாக அரங்கேறியது என்று கூறப்படுகிறது. இது சம்பந்தமாக மது விலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி தட்டி கேட்டுள்ளார். அப்போது அங்கு இருந்த ஓய்வு பெற்ற சப்-இனஸ்பெக்டர் பாண்டியன் மகன் வெங்கடேசன் ஜெயந்தியை அடித்து உதைத்துள்ளார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரது சீருடை கிழிந்தது.

ஜெயந்தி ரத்தினமங்கலம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஜெயந்தி தாக்கப்பட்ட சம்பவம் அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

இதுகுறித்து ஜெயந்தி தாழம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

விசாரணையில், வெங்கடேசன் கண்டிகை மற்றும் குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதியில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக வெங்கடேசன் மாடிக்கு செல்லும்போது ஜெயந்தி வீட்டு நாய் தொந்தரவு செய்ததாகவும் இரு குடும்பத்தினரிடையே தகராறு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இது சம்பந்தமாக குரோம்பேட்டை உடற்பயிற்சி கூடத்தில் ஜெயந்தி கேட்கும்போது அங்கேயும் சலசலப்பு ஏற்பட்டு வேளச்சேரி போலீஸ் நிலையத்தில் இரு தரப்பினரிடமும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு முன்பு வெங்கடேசனின் மனைவியை ஜெயந்தி தாக்கியுள்ளார் என்று கூறப்படுகிறது. அதை கேட்டு கோபம் அடைந்த அவர் ஜெயந்தியை சரமாரியாக தாக்கி உள்ளார் என்பது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story