சிலிண்டர் வெடித்து இளம்பெண் பலி காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயம்


சிலிண்டர் வெடித்து இளம்பெண் பலி காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயம்
x
தினத்தந்தி 19 Feb 2020 6:00 AM IST (Updated: 19 Feb 2020 12:09 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு அருகே சிலிண்டர் வெடித்து இளம்பெண் இறந்தார். அவரை காப்பாற்ற சென்ற கணவர் படுகாயம் அடைந்தார்.

ஈரோடு,

ஈரோடு அடுத்துள்ள கங்காபுரம் குளத்துபாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி நந்தினி (வயது 26). இவர்களுக்கு வினித் (7), திபேஷ் (4). என்ற 2 மகன்கள் உள்ளனர். வினித் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கிறார். திபேஷ் அங்கன்வாடிக்கு சென்று வருகிறார்.

நேற்று காலை ரமேசுக்கும், வினித்துக்கும் காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் ரமேஷ் வேலைக்கு செல்லவில்லை. வினித்தையும் பள்ளிக்கு அனுப்பவில்லை. திபேசை மட்டும் அங்கன்வாடியில் விட்டுவிட்டு வந்தார்.

உடல் கருகி சாவு

இந்தநிலையில் காலை 10 மணி அளவில் டீ போடுவதற்காக நந்தினி சமையல் அறைக்கு சென்று அடுப்பை பற்றவைத்தார். அப்போது கியாஸ் கசிந்து இருந்தது அவருக்கு தெரியவில்லை. இதனால் குபீர் என்று தீப்பிடித்தது. அந்த தீ நந்தினி அணிந்திருந்த ஆடையிலும் பற்றியது. சிறிது நேரத்தில் சிலிண்டரும் டமார் என்று வெடித்து சிதறியது. சில நொடிகளில் நந்தினியின் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதனால் அவர் அலறி துடித்தார். குடிசையும் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது.

இதனால் பதறிப்போன ரமேஷ் வினித்தை வெளியே கொண்டு விட்டுவிட்டு, மனைவியை காப்பாற்ற சென்றார். அப்போது அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் உடல் கருகி நந்தினி இறந்துவிட்டார்.

விசாரணை

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சித்தோடு போலீசாரும், ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார்கள். தீயணைப்பு வீரர்கள் தீ அருகே உள்ள வீடுகளுக்கு பரவாமல் அணைத்தார்கள். போலீசார் நந்தினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரி பிணவறைக்கு அனுப்பிவைத்தார்கள். தீக்காயம் அடைந்த ரமேசும் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story