ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 6 பேரிடம் ரூ.14 லட்சம் மோசடி - சென்னையை சேர்ந்தவர் கைது


ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 6 பேரிடம் ரூ.14 லட்சம் மோசடி - சென்னையை சேர்ந்தவர் கைது
x
தினத்தந்தி 18 Feb 2020 10:45 PM GMT (Updated: 18 Feb 2020 7:46 PM GMT)

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 6 பேரிடம் ரூ.14 லட்சம் மோசடி செய்த சென்னையை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே உள்ள விராட்டிக்குப்பத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 48). இவர் அங்காளம்மனுக்கு பூஜை செய்து அருள்வாக்கு கூறி வருகிறார். இவருக்கு விக்கிரவாண்டி அருகேயுள்ள பூண்டி கிராமத்தை சேர்ந்த குணபாலன் என்பவர் மூலமாக சென்னை கொட்டிவாக்கம் விவேகானந்தர் தெருவை சேர்ந்த குலாப்சிங் (52) என்பவர் பழக்கமானார்.

அப்போது குலாப்சிங், தான் ஆடிட்டராக இருப்பதாகவும் ஆவின் நிறுவனத்தில் பலருக்கு வேலை வாங்கி தந்துள்ளதாகவும், உங்கள் உறவினர்கள், தெரிந்தவர்கள் யாருக்கேனும் வேலை வாங்கி தர வேண்டுமானால் தன்னிடம் சொல்லும்படியும், ஒரு நபருக்கு வேலைக்காக ரூ.4 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் முதலில் ரூ.50 ஆயிரம் கொடுத்தால் போதும் என்றும் வேலைக்கான நியமன ஆணை கொடுத்த பின்னர் மீதியுள்ள பணத்தை கொடுத்தால் போதும் என்றும் கூறியுள்ளார்.

இந்த தகவலை செல்வம் தனது உறவினர்களான விழுப்புரம் பகுதியை சேர்ந்த வினோத், மாலதி, அரவிந்த், செல்வம், மகே‌‌ஷ், ‌ஷாலினி ஆகியோரிடம் கூறினார். இதற்கு அவர்கள் 6 பேரும் ஒப்புக்கொண்டனர்.

இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் குலாப்சிங், செல்வத்தின் உறவினர்களான வினோத், ‌ஷாலினி ஆகிய இருவரிடம் இருந்து தலா ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் என ரூ.7 லட்சத்தை முன்பணமாக பெற்றுக்கொண்டார். பின்னர் அவர் 21.5.2018 அன்று வினோத், ‌ஷாலினி ஆகிய இருவரிடமும் மீதமுள்ள தொகையான தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்தை பெற்றுக்கொண்டு, ஆவின் நிறுவனத்தில் வேலைக்கான போலி நியமன உத்தரவு நகலை கொடுத்ததோடு மற்ற நபர்களான மாலதி, அரவிந்த், செல்வம், மகே‌‌ஷ் ஆகிய 4 பேரையும் வேலையில் சேர்த்துவிட பணம் தரும்படி கூறியுள்ளார்.

அதன்பேரில் மாலதி ரூ.1 லட்சமும், அரவிந்த் ரூ.2 லட்சமும், செல்வம் ரூ.2 லட்சமும், மகே‌‌ஷ் ரூ.1 லட்சமும் ஆக மொத்தம் ரூ.6 லட்சத்தை குலாப்சிங்கிடம் கொடுத்துள்ளனர். பணத்தை பெற்றுக்கொண்டு அவர், மாலதி உள்பட 4 பேருக்கும் வேலைக்கான நியமன ஆணை எதுவும் பெற்றுத்தரவில்லையாம்.

இதனால் அவர்கள் 4 பேரும் வினோத், ‌ஷாலினி ஆகியோரை தொடர்பு கொண்டு விசாரித்தபோது அவர்களிடம் குலாப்சிங் கொடுத்த நியமன ஆணை போலியானது என தெரிந்தது.

பணத்தை பறிகொடுத்த வினோத் உள்பட 6 பேரும் சேர்ந்து தங்கள் உறவினர் செல்வத்திடம் சென்று குலாப்சிங்கிடம் இருந்து எப்படியாவது பணத்தை பெற்றுத்தரும்படி வற்புறுத்தினர்.

உடனே செல்வம், குலாப்சிங்கை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, அவர் ரூ.14 லட்சத்தை தனது நண்பரான சென்னையை சேர்ந்த அருள்பிரகாசிடம் கொடுத்து வைத்துள்ளதாகவும், அவர் கொடுக்கும்போது பணத்தை ஒப்படைப்பதாகவும் கூறி காலம் கடத்தி வந்தார்.

அதன் பிறகு 29.10.2018 தேதியிட்ட ரூ.5 லட்சத்திற்கான காசோலை, 31.10.2018 அன்று தேதியிட்ட ரூ.5 லட்சத்திற்கான காசோலை, அதே தேதியிட்ட ரூ.2 லட்சத்திற்கான காசோலை ஆகியவற்றை அருள்பிரகாசம், கொடுத்துள்ளார். அந்த காசோலைகளை வங்கியில் செலுத்தியபோது போதிய இருப்பு இல்லை என காசோலைகள் திரும்பி வந்தது.

எனவே இதுபற்றி செல்வமும், அவரது உறவினர்களும் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். புகாரின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திரன், இன்ஸ்பெக்டர் குமாரய்யா, சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், குமார், பாஸ்கர், பரணிதரன், நேவிஸ்அந்தோணி ரோஸி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து குலாப்சிங், அருள் பிரகா சத்தை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மேல்மருவத்தூரில் இருந்து குலாப்சிங் வெளியூருக்கு தப்பிச்செல்ல இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று குலாப்சிங்கை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை விழுப்புரம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அருள்பிரகாசத்தை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story