மார்த்தாண்டம் பகுதியில் கடைகளில் கைவரிசை: பிரபல கொள்ளையன் கைது; 2½ கிலோ நகைகள் மீட்பு


மார்த்தாண்டம் பகுதியில் கடைகளில் கைவரிசை: பிரபல கொள்ளையன் கைது; 2½ கிலோ நகைகள் மீட்பு
x
தினத்தந்தி 19 Feb 2020 12:15 AM GMT (Updated: 18 Feb 2020 8:56 PM GMT)

மார்த்தாண்டம் பகுதியில் நகை கடைகளில் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் இருந்து மொத்தம் 2½ கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டன. மேலும், தலைமறைவாக உள்ள அ.தி.மு.க. பிரமுகரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

குழித்துறை,

குமரி மாவட்டத்தில் நகைக்கடைகள், வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தன. குறிப்பாக மார்த்தாண்டம் தேசிய நெடுஞ்சாலையில் கிறிஸ்டோபர் என்பவரின் நகை கடையில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் 90 பவுன் நகைகள் கொள்ளை போனது. இதேபோல், கடந்த மாதம் விரிகோடு மடத்துவிளையை சேர்ந்த பொன் விஜயன் வீட்டில் இருந்து 57 பவுன் நகையும், அவருக்கு சொந்தமான நகை கடையில் இருந்து சுமார் 1½ கிலோ நகையும் கொள்ளையடிக்கப்பட்டது.

இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயன், சிவசங்கர், அருளப்பன், ரகுபாலாஜி, சுந்தர்லிங்கம், சாமுவேல் ஆகியோர் தலைமையில் 6 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நகை கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையில் கொள்ளையனை தேடி வந்தனர்.

எம்.பி.ஏ. பட்டதாரி

இந்தநிலையில், குழித்துறை ரெயில் நிலையத்தில் வைத்து ஒரு வாலிபரை சந்தேகத்தின் அடிப்படையில் தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நித்திரவிளை அருகே எஸ்.டி. மங்காடு, புல்லாணிவிளையை சேர்ந்த எட்வின் ஜோஸ் (வயது 27) என்பது தெரிய வந்தது.

எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் தற்போது தனது தாயாருடன் குழித்துறை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் கேரளாவில் நடந்த ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சமீபத்தில் வெளியே வந்தார். மேலும், குமரி மாவட்டத்தில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது மொத்தம் 17 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

அ.தி.மு.க. பிரமுகர்

திருடப்பட்ட நகைகளை மார்த்தாண்டம் கோட்டகத்தை சேர்ந்த பழைய நகை வியாபாரி ரமேஷ் குமாரிடம் விற்பனை செய்து வந்தார். ரமேஷ் குமார் குமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. இளைஞர் பாசறை பொருளாளராக உள்ளார். இவர் திருட்டு நகைகளை குறைவான விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தார். தற்போது, எட்வின் ஜோஸ் போலீசில் சிக்கியுள்ள நிலையில் ரமேஷ் குமார் தலைமறைவாகி விட்டார். அவர் பெங்களூருவில் இருப்பதாக தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் பெங்களூருவுக்கு விரைந்து உள்ளனர்.

எட்வின் ஜோஸ் கொள்ளையடித்த நகைகள் மூலம் கேரள அழகிகளுடன் உல்லாசமாக இருந்து ஜாலியாக வலம் வந்துள்ளார். மேலும், அருமனை அருகே ஒரு சொகுசு பங்களா உள்பட பல கோடி ரூபாய்க்கு சொத்துகள் வாங்கி குவித்துள்ளார்.

2½ கிலோ நகைகள் மீட்பு

இந்த நிலையில் அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் பல்வேறு இடங்களில் பதுக்கி வைத்திருந்த 330 பவுன் தங்க நகைகள் அதாவது சுமார் 2½ கிலோ திருட்டு நகைகளை போலீசார் மீட்டனர். இதையடுத்து எட்வின் ஜோசை போலீசார் குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நகைகள் கொள்ளைபோன கடைகளில் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் கொள்ளையனை பிடிக்க மிகவும் உதவியாக இருந்தது. தற்போது கைது செய்யப்பட்ட எட்வின் ஜோஸ் மீது 17 வழக்குகள் உள்ளன. இவரை பிடிக்க சென்றபோது, அவர் தப்பி ஓட முயன்றார். அப்போது தவறி விழுந்து அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

எட்வின் ஜோசிடம் இருந்து நகைகளை வாங்கிய அ.தி.மு.க. பிரமுகரை வலைவீசி தேடி வருகிறோம்.

இவ்வாறு துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன் கூறினார். 

Next Story