தாளவாடி அருகே தொடர் அட்டகாசம்: கூண்டுவைத்தும் சிக்காத சிறுத்தை ஆடு-நாயை கடித்துக்கொன்றது


தாளவாடி அருகே தொடர் அட்டகாசம்: கூண்டுவைத்தும் சிக்காத சிறுத்தை ஆடு-நாயை கடித்துக்கொன்றது
x
தினத்தந்தி 18 Feb 2020 11:30 PM GMT (Updated: 18 Feb 2020 9:45 PM GMT)

தாளவாடி அருகே தொடர்ந்து அட்டகாசம் செய்யும் சிறுத்தை ஆடு-நாயை கடித்துக்கொன்றது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளார்கள்.

தாளவாடி,

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி வனச்சரகத்தில் ஏராளமான புலி, சிறுத்தைகள் உள்ளன. வனத்தில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அவ்வப்போது கிராமத்துக்குள் புகுந்து ஆடு, மாடுகளை வேட்டையாடி வருகிறது.

இந்தநிலையில் கடந்த 3 மாதங்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் ஒரு சிறுத்தை பீம்ராஜ்நகர், சூசைபுரம், தொட்டகாஜனூர் கிராமங்களில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து பட்டியில் கட்டியிருந்த 10 ஆடுகளையும், 8 நாய்களையும் கடித்து கொன்று வேட்டையாடி உள்ளது.

இதனால் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர். ஆனால் சிறுத்தை கூண்டில் சிக்காமல் போக்கு காட்டி வருகிறது.

மீண்டும் வேட்டை

இந்தநிலையில் சிறுத்தை மீண்டும் வேட்டையை தொடர்ந்துள்ளது. தாளவாடி அடுத்த தொட்டகாஜனூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரதாப் (வயது 28). இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் பட்டி அமைத்து ஆடுகளும் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பட்டியில் உள்ள ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டது. தூங்கிக்கொண்டு இருந்த பிரதாப் எழுந்து பட்டிக்கு சென்று பார்த்தார்.

அப்போது ஒரு ஆட்டை சிறுத்தை கடித்து குதறிக்கொண்டு இருந்தது. உடனே பிரதாப் கையில் ஒரு கம்பை வைத்துக்கொண்டு ஒலி எழுப்பினார். இதனால் ஆட்டின் உடலை போட்டுவிட்டு சிறுத்தை ஓடிவிட்டது. இது பற்றி பிரதாப் தாளவாடி வனத்துறைக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் வந்த வனத்துறையினர் சிறுத்தையின் கால் தடங்களை ஆய்வு செய்தார்கள். அந்த தடயத்தை வைத்து சிறுத்தை நடமாடும் இடங்களை கண்காணித்து வருகிறார்கள்.

நாயை கொன்றது

இதேபோல் ஜீர்கள்ளி வனச்சரகத்திக்கு உட்பட்ட தொட்டமுதிகரை கிராமத்தை சேர்ந்தவர் கோபால்சாமி. விவசாயி. இவர் வீட்டின் அருகே பட்டி அமைத்து ஆடு, மாடுகள் மற்றும் காவலுக்காக நாய் வளர்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று பட்டியில் புகுந்து நாயை கடித்து கொன்றது.

நாள்தோறும் சிறுத்தை கிராமங்களில் புகுந்து வேட்டையாடி வருவதால் மக்கள் பகல் நேரங்களில் கூட தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லாமல் பீதியில் உள்ளார்கள். இதனால் உடனே சிறுத்தையை பிடிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள்.


Next Story