சென்னை விமான நிலையத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 19 Feb 2020 4:18 AM IST (Updated: 19 Feb 2020 4:18 AM IST)
t-max-icont-min-icon

சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் 2 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். அப்போது கொழும்பில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த இலங்கையை சேர்ந்த ஆகாஷ்காந்த் (வயது 23) என்பவர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.35 லட்சம் மதிப்புள்ள 824 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள். கொழும்பில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த முகமது இப்ராகீம்(58) என்பவரிடம் இருந்து ரூ.11 லட்சத்து 37 ஆயிரம் மதிப்புள்ள 268 கிராம் தங்க கத்தியை கைப்பற்றினார்கள்.அதேபோல் அபுதாபியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த சவுக்கத் அலி(32) என்பவரிடம் இருந்து ரூ.18 லட்சம் மதிப்புள்ள 426 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

மலேசியாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த ஜம்மா கான்(49), ரகீம்(48) ஆகியோரிடம் இருந்து ரூ.21 லட்சம் மதிப்புள்ள 503 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

ஒரே நாளில் நடத்திய சோதனையில் 5 பேரிடம் இருந்து ரூ. 85 லட்சத்து 37 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 21 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இலங்கை வாலிபர் ஆகாஷ்காந்த் கைது செய்யப்பட்டார்.

Next Story