ஆவடியில் 2 குழந்தைகளுடன் ரெயில் முன்பாய்ந்து இளம்பெண் தற்கொலை குடும்ப தகராறில் விபரீதம்
ஆவடியில் குடும்ப தகராறு காரணமாக விரக்தி அடைந்த இளம்பெண் ஒருவர் 2 ஆண் குழந்தைகளுடன் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆவடி,
ஆவடி அடுத்த சேக்காடு, சிங்கார திருநகர், 3-வது தெருவில் வசித்து வருபவர் முத்துமாரி (வயது 25). இவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (23). இவர்கள் இருவரும் காதலித்து 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கவின்சரன் (2), ரிஷ்வந்த் என்ற 3 மாத குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில் முத்துமாரி சரிவர வேலைக்கு போகாமல் இருந்ததாகவும், இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தாங்கள் குடியிருக்க கூடிய வாடகை வீட்டை பூட்டிவிட்டு, அதே பகுதியில் வசிக்கும் முத்துமாரியின் பெற்றோர் வீட்டிற்கு அவர்கள் சென்றுள்ளனர்.
கோபித்து கொண்டு சென்றார்
அங்கு தங்கியிருந்தபோது நேற்று முன்தினம் இரவு முத்துமாரியின் தங்கை தகராறில் ஈடுபட்டுள்ளார். உடனே விஜயலட்சுமி தனது கணவரிடம் நம் வீட்டிற்கு போகலாம் என்று அழைத்ததாக தெரிகிறது. ஆனால் மனைவியின் பேச்சைக் கேட்காமல் அவர் அங்கேயே இருந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த விஜயலட்சுமி கோபித்து கொண்டு இரண்டு மகன்களையும் தூக்கிக்கொண்டு இரவு 10 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு வெளியே வந்துள்ளார். இதையடுத்து முத்துமாரி சிறிது நேரம் கழித்து மனைவியை தேடி அவர்கள் குடியிருந்த வாடகை வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அங்கு வீடு பூட்டி இருப்பதை கண்டு முத்துமாரி அதிர்ச்சி அடைந்தார்.
உடல் சிதறி பலி
இதையடுத்து அவர் மனைவியையும் குழந்தைகளையும் இரவு முழுவதும் பல இடங்களில் தேடி அலைந்து உள்ளார். பின்னர் ஆவடி போலீஸ் நிலையத்திற்கு சென்று குடும்பத்தினரை காணவில்லை என்று புகார் கொடுத்தார்.
இந்நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் ஆவடி அடுத்த இந்துக்கல்லூரி ரெயில் நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் தண்டவாளத்தில் ரெயில் முன் பாய்ந்ததில் அடிபட்டு விஜயலட்சுமி அவரது இரண்டு குழந்தைகளும் உடல் சிதறி பலியாகி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவடி ரெயில்வே போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆர்.டி.ஓ. விசாரணை
இதுகுறித்து சென்னை சென்டிரல் ரெயில்வே போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன் வழக்குப்பதிவு செய்து முத்துமாரியை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்.
இவர்களுக்கு திருமணம் நடந்து 4 ஆண்டுகளே ஆவதால் திருவள்ளூர் ஆர்.டி.ஓ.விசாரணை நடக்கிறது.
இந்த விபத்து காரணமாக நேற்று காலை சென்னை நோக்கி வந்த ஏலகிரி எக்ஸ்பிரஸ், மங்களூரூ எக்ஸ்பிரஸ் ரெயில்கள் உள்ளிட்டவை புறநகர் மின்சார ரெயில்கள் செல்லக்கூடிய ரெயில் தண்டவாளத்தில் 2 மணி நேரம் இயக்கப்பட்டது. இதனால் அந்த தண்டவாளத்தில் வந்து சேர வேண்டிய புறநகர் மின்சார ரெயில்கள் தாமதமாக வந்தடைந்தன.
Related Tags :
Next Story