கனிமார்க்கெட் ஜவுளிச்சந்தையில் கடை வாடகையை குறைவாக உயர்த்த வேண்டும் வியாபாரிகள் மனு


கனிமார்க்கெட் ஜவுளிச்சந்தையில் கடை வாடகையை குறைவாக உயர்த்த வேண்டும் வியாபாரிகள் மனு
x
தினத்தந்தி 19 Feb 2020 5:00 AM IST (Updated: 19 Feb 2020 5:03 AM IST)
t-max-icont-min-icon

கனிமார்க்கெட் ஜவுளிச்சந்தையில் கடை வாடகையை குறைவாக உயர்த்த வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவனிடம் வியாபாரிகள் மனு கொடுத்தனர்.

ஈரோடு,

ஈரோடு கனிமார்க்கெட் ஜவுளிச்சந்தையில் புதிய வணிக வளாகம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக ஏற்கனவே உள்ள கடைகள் இடித்து அகற்றப்பட்டன. மேலும், வியாபாரிகளின் வசதிக்காக அதே பகுதியில் தற்காலிக கடைகள் அமைத்து கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த கடைகளுக்கு புதிய வாடகையை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் ஜவுளி வியாபாரிகள் அ.தி.மு.க. பகுதி செயலாளர் பெரியார்நகர் மனோகரன் தலைமையில் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவனிடம் நேற்று கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்ததாவது:-

வியாபாரம் பாதிப்பு

கனிமார்க்கெட்டில் 40 ஆண்டுகளாக ஜவுளி வியாபாரம் செய்து வருகிறோம். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை வாடகை நிலுவை இல்லாமல் மாநகராட்சிக்கு செலுத்தி உள்ளோம். ஆண்டுதோறும் 5 சதவீதம் வாடகை உயர்த்தப்பட்டு வந்தது. இந்தநிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வணிக வளாகம் கட்டப்படுவதால் தற்காலிக கடைகள் ஒதுக்கி தரப்பட்டு உள்ளது. இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. வழிப்பாதை முறையாக இல்லாததால் வியாபாரிகள் வருவதில்லை. எனவே தற்காலிக கடைக்கு ஒரு சதுர அடிக்கு ரூ.20 வீதம் வாடகை கொடுத்து வருகிறோம். இதில் ரூ.5 உயர்த்தி சதுர அடிக்கு ரூ.25 வீதம் என கடை வாடகையை குறைவாக உயர்த்த வேண்டும். மேலும், தற்காலிக கடை ஒதுக்கீட்டில் ஏற்கனவே மாநகராட்சி அறிவித்து இருந்த அடிப்படையில் தற்காலிக கடைகள் ஒதுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் வியாபாரிகள் கூறிஇருந்தனர்.

Next Story