தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை - தனுஷ்கோடியில் கலங்கரை விளக்கம் அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய மந்திரி பேச்சு


தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை - தனுஷ்கோடியில்  கலங்கரை விளக்கம் அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய மந்திரி பேச்சு
x
தினத்தந்தி 19 Feb 2020 4:00 AM IST (Updated: 19 Feb 2020 5:26 AM IST)
t-max-icont-min-icon

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தனுஷ்கோடியில் நடந்த கலங்கரை விளக்கம் அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா பேசினார்.

ராமேசுவரம், 

ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி பகுதியில் மீன்பிடி தொழிலை நம்பி தனுஷ்கோடி கம்பிப்பாடு, பாலம், எம்.ஆர்.சத்திரம் ஆகிய பகுதிகளில் ஏராளமான மீனவர்கள் உள்ளனர். அது போல் மீனவர்களின் வசதிக்காக தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையில் புதிதாக கலங்கரை விளக்கம் கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

கலங்கரை விளக்கத்துக்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய கப்பல் போக்குவரத்து துறை இணை மந்திரி மன்சுக் மாண்டவியா கலங்கரை விளக்க பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த கலங்கரை விளக்கத்தின் மாதிரியையும் பார்வையிட்டார்.

தொடர்ந்து நடைபெற்ற விழாவில் கலங்கரை விளக்கங்களின் தலைமை இயக்குனர் மூர்த்தி வரவேற்றுப் பேசினார். எம்.பி. நவாஸ்கனி, எம்.எல்.ஏ. மணிகண்டன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். புதிய கலங்கரை விளக்க பணிகளுக்கான கல்வெட்டை திறந்து வைத்து மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா பேசியதாவது:-

இந்த விழாவில் கலந்து கொண்டதோடு, மீனவ மக்கள் அனைவரையும் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ரூ.7 கோடியில் கட்டப்பட உள்ள இந்த கலங்கரை விளக்கம், இன்னும் ஒரு ஆண்டில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. 50 மீட்டர் உயரத்தில் கட்டப்படும் கலங்கரை விளக்கத்தின் மேல் பகுதியில் 18 கடல் மைல் தூரத்திற்கு ஒளி வீசும் அளவிற்கு அதிக சக்தி கொண்ட மின் விளக்குகள் அமைக்கப்பட உள்ளன.

கலங்கரை விளக்கத்தின் மேல் பகுதிக்கு செல்ல லிப்ட் வசதி அமைக்கப்படும். கலங்கரை விளக்க பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வந்த பின்பு தனுஷ்கோடி வரும் சுற்றுலா பயணிகள் மேல் பகுதிக்கு சென்று சுற்றி பார்க்கவும் அனுமதிக்கப்படுவார்கள். மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கும், கப்பல்களுக்கும் இந்த கலங்கரை விளக்கம் ஒரு வழிகாட்டியாகவும், மிகுந்த பயனுள்ளதாகவும் இருக்கும். இந்த கலங்கரை விளக்கத்தில் இருந்து கடலில் செல்லும் படகுகள், கப்பல்களும் கண்காணிக்கப்படும்.

மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மத்திய அரசு, ஆழ்கடல் மீன்பிடி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதற்காக மத்திய அரசு ரூ.750 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. கடந்த வாரம் இந்தியா வந்த இலங்கை பிரதமர் ராஜபக்சேவிடம், பிரதமர் மோடி தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து பேசியுள்ளார். தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் கலெக்டர் வீரராகவராவ், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், சென்னை துறைமுக கழக தலைவர் ரவீந்திரன், கலங்கரை விளக்கங்களின் இயக்குனர் வெங்கட்ராமன், துணை இயக்குனர் முருகானந்தம், பா.ஜனதா மாநில துணை தலைவர் சுப.நாகராஜன், மாவட்ட தலைவர் முரளிதரன், அ.தி.மு.க. நகர செயலாளர் கே.கே.அர்ச்சுனன், முன்னாள் மாவட்ட செயலாளர் முருகேசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story