விலை உயர்வை கண்டித்து கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் நூதன ஆர்ப்பாட்டம்


விலை உயர்வை கண்டித்து கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் நூதன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Feb 2020 5:35 AM IST (Updated: 19 Feb 2020 5:35 AM IST)
t-max-icont-min-icon

விலை உயர்வை கண்டித்து கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரசார் நூதனமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி,

மத்திய அரசு கியாஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. விலை உயர்வை கண்டித்து திரும்பப் பெறக் கோரியும் புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று மாலை அண்ணா சிலை அருகில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதனமாக போராட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நமச்சிவாயம், முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அனைத்து அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது மத்திய அரசை கண்டித்தும், விலை உயர்வை திரும்ப பெறக் கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.

இதன்பின் முதல் அமைச்சர் நாராயணசாமி கண்டன உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

மக்கள் விரோத போக்கு

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.350 மானியம் மத்திய அரசால் வழங்கப்பட்டது. எனவே ரூ.350 கையில் இருந்தால் எரிவாயு சிலிண்டர் வாங்கி விடலாம். ஆனால் தற்போது சிலிண்டர் வாங்கிய பின்னர் தான் வங்கி கணக்கில் மானியம் வருகிறது. எனவே ரூ.950 கையில் இருந்தால் தான் சிலிண்டர் வாங்க முடியும்.

மத்திய அரசு தொடர்ந்து ஏழை, எளிய மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. மத்திய அரசுக்கு எதிராக இளைஞர் காங்கிரசார் தொடர்ந்து போராட்டம் நடத்த வேண்டும். நாங்கள் உங்களுக்கு துணையாக இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

நமச்சிவாயம்

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நமச்சிவாயம் பேசியதாவது:-

மத்திய அரசு தொடர்ந்து மக்களை வஞ்சித்து வருகிறது. மக்களை பாதிக்கும் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

இது போன்ற காலகட்டங்களில் காங்கிரஸ் கட்சி மக்களுக்காக துணை நிற்கிறது. மத்திய அரசை எதிர்த்து மக்களுக்காக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது.

புதுவை மாநிலத்தில் மத்திய அரசின் பிரதிநிதியாக உள்ள கவர்னர் கிரண்பெடி அரசுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார். இதனை முதல்-அமைச்சர் நாராயணசாமி சட்ட ரீதியாக எதிர்த்து வெற்றி பெற்று வருகிறார். அதன் மூலம் தான் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடிகிறது. முதல்-அமைச்சரின் இது போன்ற நடவடிக்கைகளுக்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story