தனியார் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களுக்கு இடங்களை பெற்று தருவது யாருடைய பொறுப்பு? கவர்னர் கேள்வி


தனியார் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களுக்கு இடங்களை பெற்று தருவது யாருடைய பொறுப்பு? கவர்னர் கேள்வி
x
தினத்தந்தி 19 Feb 2020 12:23 AM GMT (Updated: 2020-02-19T05:53:23+05:30)

தனியார் மருத்துவ கல்லூரிகளில் புதுச்சேரி மாணவர்களுக்கு இடங்களை பெற்று தருவது யாருடைய பொறுப்பு? என்று கவர்னர் கிரண்பெடி கேள்வி எழுப்பி உள்ளார்.

புதுச்சேரி,

புதுவையில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சென்டாக் மருத்துவ மாணவர் சேர்க்கையில் மோசடி நடந்ததாக புகார்கள் கூறப்பட்டன. இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி புகார் கூறப்பட்ட அரசு உயர் அதிகாரிகள் 6 பேரை விடுவித்தது.

புதுவை அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் விதமாக கவர்னர் கிரண்பெடி இந்த குற்றச்சாட்டை கூறியதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியிருந்தார்.

கிரண்பெடி பதில்

அவரது கருத்துக்கு பதில் அளிக்கும் விதமாக கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு செய்வதில் ஏற்பட்ட முறைகேடு கவர்னர் மாளிகை அதிகாரிகளால் வெளிக்கொண்டுவரப்பட்டது. அது சாதாரண போராட்டம் அல்ல. தகுதியானவர்களுக்கு நீதி வழங்குவதற்காக நாங்கள் அதை உடைத்தோம்.

தலையீடு

தனியார் மருத்துவ கல்லூரிகள் அதிகமான கட்டணங்களை கேட்கின்றன. இதுதொடர்பாக பெற்றோரும், மாணவர்களும் கவர்னர் மாளிகைக்கு தொடர்ந்து புகார் அளித்ததன் காரணமாக இது தொடங்கியது. நாங்கள் தளத்துக்கு சென்றோம். அப்போது குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டன.

இதைத்தொடர்ந்து சி.பி.ஐ. விசாரணை தொடங்கியது. இதன் காரணமாக தகுதியான மாணவர்களின் பட்டியல் சரிசெய்யப்பட்டது. இதற்காக மருத்துவ கவுன்சிலுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். கவர்னர் மாளிகையின் தொடர்ச்சியான தலையீடுகள் காரணமாக இவை அனைத்தும் நடந்தன.

யார் பொறுப்பு?

ஊழல் மற்றும் அலட்சியம் குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள்முன்பு மாணவர்கள் உறுதிமொழி வாக்குமூலம் அளித்தனர். முதல்-அமைச்சர் தெரிவிக்காதது என்னவென்றால், தனியார் மருத்துவக்கல்லூரிகளின் 6 மூத்த அதிகாரிகள் தற்போது வழக்கு மற்றும் மேல் விசாரணைகளை எதிர்கொள்கின்றனர்.

இதன் மூலம் வலிமைமிக்க சக்திவாய்ந்தவர்களின் பெயர்கள் வீழ்ச்சியடையும். (இது அதிகாரிகளாகவும் இருக்கலாம்). அல்லது அது சி.பி.ஐ. பதிவுகளில் புதைக்கப்பட்டிருக்கும். அன்றைய அதிகாரிகள் குற்றவாளிகளாக வைக்கப்படா விட்டாலும்கூட கல்லூரிகளை மேற்பார்வையிட்டவர்கள் யார்? மாணவர்களுக்கு நியாயமான இடத்தை பெற்று தருவது யாருடைய பொறுப்பு?

பாடங்கள்

நீதிக்கான போராட்டம் மதிப்புக்குரியது என்று நான் கருதுகிறேன். மருத்துவ மாணவர் சேர்க்கையின் தவறை அம்பலப்படுத்தியதால் புதுச்சேரியின் பல மாணவர்களுக்கு தற்போது நியாயமான கட்டணத்தில் சேர்க்கை கிடைக்கிறது. அப்போது தோல்வியுற்றிருந்தால் இப்போது அவர்கள் மருத்துவ கல்லூரிகளில் படித்திருக்க மாட்டார்கள்.

பொதுவான அதிகாரிகள் அழுத்தங்களுக்கு அடிபணிவதில்லை. தற்போது மேற்பார்வையிடவும், சிக்கல்களை தடுக்கவும் பாடங்கள் கற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறு கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.

Next Story