என்.எல்.சி. முதலாவது அனல்மின் நிலையம் செப்டம்பர் வரை இயங்கும்-அதிகாரி தகவல்


என்.எல்.சி. முதலாவது அனல்மின் நிலையம் செப்டம்பர் வரை இயங்கும்-அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 19 Feb 2020 1:53 PM IST (Updated: 19 Feb 2020 1:53 PM IST)
t-max-icont-min-icon

என்.எல்.சி. முதலாவது அனல்மின் நிலையம் செப்டம்பர் மாதம் வரை இயங்கும் என அதிகாரி தெரிவித்தார்.

அனல்மின் நிலையம்
நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் 3 சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் நிலக்கரியை கொண்டு, அனல் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு, மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 1970-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட முதலாவது அனல்மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. பொதுவாக அனல் மின் நிலையங்களுக்கு 25 ஆண்டுகள் ஆயுட்காலமாக நிர்ணயிக்கப்படுகிறது.

அதன்பின்னர் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு ஆயுள் நீட்டிப்பு செய்து, செயல்பாட்டில் வைத்திருப்பது வழக்கம். அதன் அடிப்படையில் ஆயுட்காலம் முடிந்த என்.எல்.சி. முதலாம் அனல் மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு, ஆயுட்காலத்தை நீட்டித்து, தொடர்ந்து மின் உற்பத்தி செய்தனர். இந்த அனல்மின் நிலையம் அடுத்த மாதம் (மார்ச்) 31-ந் தேதி வரை செயல்பட மத்திய அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி உள்ளது.

மின் தேவை
இந்நிலையில் என்.எல்.சி. சார்பில் மணிக்கு ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய 2 அலகுகளை கொண்ட புதிய அனல் மின் நிலைய கட்டுமான பணிகள் நெய்வேலியில் நடைபெற்று வருகிறது. இதில் முதலாவது அலகில் மின்உற்பத்தி தொடங்கியுள்ள நிலையில், 2-வது அலகினை மின்உற்பத்திக்காக தயார் செய்து வருகிறார்கள். இதனை செயல்படுத்த இன்னும் 6 மாதம் ஆகும். அதுவரை என்.எல்.சி. முதலாவது அனல்மின் நிலையத்தை இயக்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. மேலும் என்.எல்.சி. முதலாவது அனல் மின் நிலையத்தின் பராமரிப்பு நிலை மற்றும் வருகிற கோடை காலத்தில் ஏற்படுகிற மின் தேவையை கருத்தில் கொண்டு, அதற்கு அனுமதி கிடைத்துவிடும். எனவே வருகிற செப்டம்பர் மாதம் வரை என்.எல்.சி. முதலாவது அனல்மின் நிலையத்தை இயக்க அனுமதி வழங்கப்படலாம். மேற்கண்ட தகவலை என்.எல்.சி. உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story