அரசு பொதுத் தேர்வை 54 ஆயிரத்து 493 மாணவ–மாணவிகள் எழுதுகின்றனர்; கலெக்டர் தகவல்


அரசு பொதுத் தேர்வை 54 ஆயிரத்து 493 மாணவ–மாணவிகள் எழுதுகின்றனர்;  கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 20 Feb 2020 4:00 AM IST (Updated: 19 Feb 2020 7:43 PM IST)
t-max-icont-min-icon

இந்த கல்வி ஆண்டில் 10,11,12–ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வை 54 ஆயிரத்து 493 மாணவ – மாணவிகள் எழுத உள்ளதாக கலெக்டர் சிவன்அருள் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர், 

அரசு பொதுத் தேர்வுகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்வு குழுவினர் ஆலோசனை கூட்டம் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சிவன்அருள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:–

திருப்பத்தூர் மாவட்டத்தில் 94 அரசு உயர்நிலைப்பள்ளிகள், 103 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 52 மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. வருகிற 2–ந் தேதி தொடங்கும் 12–ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வை திருப்பத்தூர் மாவட்டத்தில் 16 ஆயிரத்து 11 மாணவ –மாணவிகள் எழுத உள்ளனர். இவர்களுக்காக 63 மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

வருகிற 4–ந் தேதி தொடங்கும் 11–ம் வகுப்பு பொதுத் தேர்வை 16 ஆயிரத்து 772 மாணவ–மாணவிகள் எழுதுகின்றனர். இவர்களுக்காக 61 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அடுத்த மாதம் (மார்ச்) 27–ந் தேதி தொடங்கும் 10–ம் வகுப்பு பொதுத் தேர்வை 21 ஆயிரத்து 710 மாணவ – மாணவிகள் எழுத உள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு பொதுத் தேர்வு நடைபெறும் அனைத்து மையங்களிலும் குடிநீர் வசதி, தடையின்றி மின்சாரம், போக்குவரத்து, கழிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளதா? என்பதை மாவட்ட தேர்வுக்குழுவினர் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.

தேர்வில் முறைகேடுகள் நடைபெறாத வகையில் தேர்வுக்குழுவினர் பலப்படுத்தவேண்டும். தேர்வு வினாத்தாள் வைக்க தேவையான காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.

பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ – மாணவிகள் கவனம் சிந்தாமல் சிறப்பாக தேர்வு எழுத தேவையான ஏற்பாடுகளை மாவட்ட தேர்வு குழுவினர் செய்ய வேண்டும். எந்தவித புகாரும் திருப்பத்தூர் மாவட்டத்தில் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதில் மொத்தமாக 54 ஆயிரத்து 493 மாணவ – மாணவிகள் பொதுத் தேர்வு எழுதுகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் திருப்பத்தூர் சப்–கலெக்டர் வந்தனாகார்க், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன்சேகர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட கல்வி அலுவலர்கள் மார்ஸ், மணிமேகலை, செல்வராணி உள்பட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Next Story