ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மான பதிவேட்டில் கையெழுத்திடாமல் தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு
குளித்தலை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மான பதிவேட்டில் கையெழுத்திடாமல் தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மேலும் இடம் ஒதுக்கவில்லை என ஊராட்சி உறுப்பினர் குற்றச்சாட்டினார்.
குளித்தலை,
கரூர் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழுத் தலைவர் விஜயவிநாயகம் தலைமை தாங்கினார். உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) உமாசங்கர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முதலில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் குறித்து வாசிக்க தொடங்கப்பட்டது. அதில் முதல் இரண்டு தீர்மானத்தில் தமிழகத்தில் நடைபெறாமல் இருந்த உள்ளாட்சி தேர்தலை உறுதியாக நின்று தமிழக அரசு வாக்குறுதி அளித்தபடி நடத்தி முடித்து மக்கள் பணி பாதிக்காமல் தொய்வின்றி தொடர்ந்து நடைபெற வழிவகை செய்த தமிழக முதல்-அமைச்சருக்கும், துணை முதல்-அமைச்சருக்கும் நன்றி தெரிவித்தல் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை நியாயமாக, உண்மையாக நடத்திட அறிவுரை வழங்கி கரூர் மாவட்டத்திற்கு நற்பெயர் பெற்றுத்தர உரிய ஆலோசனை வழங்கி ஒத்துழைப்பு நல்கிய உள்ளாட்சித்துறை, போக்குவரத்துத்துறை அமைச்சர், மாவட்ட கலெக்டர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆகியோருக்கும் நன்றி தெரிப்பவதாக குறிப்பிடப்பட்டு வாசிக்கப்பட்டது.
அப்போது பேசிய ஒன்றியக்குழு உறுப்பினர் சந்திரமோகன் (தி.மு.க.) உள்ளாட்சி தேர்தலை நடத்தியது, தமிழக அரசு இல்லை. நீதிமன்றத்தின் உத்திரவின் பேரிலேயே இந்த தேர்தல் நடைபெற்றுள்ளது. ஆகவே இத்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறினார். பின்னர் கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட 33 தீர்மானங்களும் வாசிக்கப்பட்டது. இதையடுத்து வருகை பதிவேட்டில் மட்டும் கையெழுத்திட்டுவிட்டு, தீர்மான பதிவேட்டில் கையெழுத்திடாமல் தி.மு.க. ஒன்றியக்குழு உறுப்பினர்களான சந்திரமோகன், சாந்தஷீலா, சங்கீதா, முருகேசன் ஆகியோர் கூட்ட அறையில் இருந்து வெளியேறினர்கள். கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமரவேல், மங்கையர்க்கரசி, ஒன்றியக்குழு துணைத்தலைவர் இளங்கோவன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த ஒன்றியக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேன்மொழிதியாகராஜன் (தி.மு.க.) கூட்டம் முடிந்தவுடன் கூட்ட அறையில் இருந்து வெளியேறினார். பின்னர் கூட்டத்தில் கலந்து கொள்ளவந்த தனக்கு அமர்வதற்கு உரிய இடம் ஒதுக்கப்படவில்லை என்றும் தன்னை அவமானப்படுத்தும் நோக்குடன் அதிகாரிகள் நடந்துகொண்டதாகவும், தனக்கு அவமரியாதை ஏற்படுத்திய அதிகாரிகள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்வேன் என வட்டார வளர்ச்சி அலுவலர் குமரவேலிடம் தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றார். இதை கண்டிக்கத்தக்கதென தி.மு.க. உறுப்பினர்களும் கூறிச்சென்றனர்.
Related Tags :
Next Story