உசிலம்பட்டியில் இருந்து தேனி வரை ரெயில்வே தண்டவாளம் அமைக்கும் பணிகளை அதிகாரிகள் ஆய்வு


உசிலம்பட்டியில் இருந்து தேனி வரை ரெயில்வே தண்டவாளம் அமைக்கும் பணிகளை அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 19 Feb 2020 10:00 PM GMT (Updated: 19 Feb 2020 4:51 PM GMT)

உசிலம்பட்டியில் இருந்து தேனி வரை ரெயில்வே தண்டவாளம் அமைக்கும் பணிகளை ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தேனி,

போடியில் இருந்து மதுரைக்கு மீட்டர்கேஜ் ரெயில்பாதையில் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயில்பாதையை அகல ரெயில்பாதையாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டதால், கடந்த 2010-ம் ஆண்டு இறுதியில் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர், தண்டவாளங்கள் அகற்றப்பட்டன. ஆனால், அதன்பிறகு பணிகளை தொடங்குவதில் தொய்வு ஏற்பட்டது.

இந்த ரெயில்வே திட்டப் பணிக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் பணிகள் சில ஆண்டுகளாக முடங்கின. நிதி ஒதுக்கீடு கேட்டு பல்வேறு போராட்டங்கள் தேனி மாவட்டத்தில் நடந்தன. இதையடுத்து இந்த திட்ட பணிக்கு 2017-ம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.

மதுரையில் இருந்து போடி வரை சுமார் 90 கிலோமீட்டர் தொலைவுக்கு அகல ரெயில்பாதை அமைக்கப்பட உள்ளன. முதற்கட்டமாக மதுரையில் இருந்து உசிலம்பட்டி வரை சுமார் 37 கிலோமீட்டர் தூரத்துக்கு ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றன. இதையடுத்து மதுரையில் இருந்து உசிலம்பட்டி வரை ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

தொடர்ந்து உசிலம்பட்டியில் இருந்து போடி வரை சுமார் 53 கிலோமீட்டர் தூரம் தண்டவாளம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உசிலம்பட்டிக்கும், ஆண்டிப்பட்டிக்கும் இடையே உள்ள கணவாய் பகுதியில் மலைகளை தகர்த்து ரெயில்வே பாதை அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. பாறைகள் என்பதால் இவை வெடி வைத்து தகர்க்கப்பட்டு வருகிறது. இதனால், அந்த பகுதிகளில் பணிகள் மெதுவாக நடந்து வருகின்றன.

அதேநேரத்தில் கணவாய் கடந்து ஆண்டிப்பட்டியில் இருந்து தேனி வரை ரெயில்வே தண்டவாளம் அமைக்கப்பட்டு உள்ளது. தண்டவாளம் அமைக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்கு தென்னக ரெயில்வே தலைமை நிர்வாக அதிகாரி (கட்டுமானம்) ஏ.கே.சின்னா தலைமையில் ரெயில்வே அதிகாரிகள் நேற்று முன்தினம் தேனி வந்தனர். முதற்கட்டமாக அவர்கள் ஆண்டிப்பட்டி பகுதியில் ரெயில்வே தண்டவாளம் அமைக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

நேற்று அவர்கள், ஆண்டிப்பட்டியில் இருந்து தேனி வரை நடைபெற்றுள்ள பணிகளை ஆய்வு செய்தனர். இதற்காக தண்டவாளம் மேல் கையால் தள்ளும் வண்டியில் அதிகாரிகள் பயணம் செய்து இந்த ஆய்வு மேற்கொண்டனர். மேலும், தேனி குன்னூர் பகுதியில் தண்டவாளம் அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டு, பணிகளை துரிதமாக மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கினர்.

இந்த ஆய்வில் சென்னை ரெயில்வே தலைமை பொறியாளர் (கட்டுமானம்) இளம்பூரணன், செயற்பொறியாளர் மாரிமுத்து மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Next Story