கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறுநீரகப்பை செயல்பாட்டை கண்டறியும் நவீன கருவி ‘டீன்’ தொடங்கி வைத்தார்
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறுநீரகப்பை செயல்பாட்டை கண்டறியும் நவீன கருவியை டீன் தொடங்கிவைத்தார்.
சென்னை,
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்நோயாளியாகவும், வெளிநோயாளியாகவும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ துறைகள் செயல்படுகிறது.
சிறுநீரக அறுவை சிகிச்சை துறையில் சிறுநீரகப்பையின் செயல்பாட்டை கண்காணிக்க ‘சிறுநீரகப்பை ஆய்வு மையம்’ தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு மையத்தில் ரூ.14 லட்சம் மதிப்புள்ள ‘யூரோ டைனமிக்’ எனப்படும் நவீன ‘சிறுநீரகப்பை பரிசோதனை கருவி’யை மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் வசந்தாமணி நேற்று தொடங்கிவைத்தார். பின்னர் இது குறித்து அவர் பேசியதாவது:-
நாட்டில் பெண்கள் பலர் சிறுநீரை அடக்க முடியாத பிரச்சினையினால் அவதிப்படுகின்றனர். குறிப்பாக இது 40 முதல் 50 வயது பெண்களில் அதிகம் காணப்படுகிறது.
நவீன கருவி
இந்த பிரச்சினையை பெண்கள் வெளியே சொல்ல முடியாமலும், சிரித்தால், தும்மினால், உட்கார்ந்தால், எழுந்தால் சிறுநீரை அடக்க முடியாமல் மற்றவர்கள் முன்னாள் அவமானமாக உணரும் நிலையில் உள்ளனர்.
இதற்கான சிகிச்சையினை நல்ல முறையில் அளிப்பதற்கான முயற்சியில் புதிதாக ‘சிறுநீரகப்பை செயல்பாட்டை கண்டறியும் நவீன கருவி’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த கருவியின் மூலம் சிறுநீர் அடக்காமை பிரச்சினையினால் பாதிக்கப்படும் பெண்களின் மூலக்காரணம் கண்டறியப்பட்டு அதற்கான தகுந்த சிகிச்சை வழங்கப்படுகிறது. இந்த கருவியின் மூலம் ஆண்களின் சிறுநீரகப்பை பிரச்சினையையும் கண்டறியலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவ நிர்வாக அதிகாரி டாக்டர் ராஜ்குமார், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பல்ராமன், துறைத்தலைவர் டாக்டர் கோவிந்தராஜன் மற்றும் டாக்டர்கள் செந்தில் வேல், ஆயிஷா, நர்சுகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story