போலீஸ் தடியடி சம்பவத்தை கண்டித்து ஐகோர்ட்டில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்


போலீஸ் தடியடி சம்பவத்தை கண்டித்து   ஐகோர்ட்டில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Feb 2020 4:15 AM IST (Updated: 19 Feb 2020 11:10 PM IST)
t-max-icont-min-icon

சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் நேற்று கடைப்பிடித்து கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை, 

இலங்கையில் உள்நாட்டு போர் கடந்த 2009-ம் ஆண்டு நடந்தபோது, அங்குள்ள தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டனர். இதை கண்டித்து சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது  சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் தொடர்பான வழக்கு  விசாரணைக்காக பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி ஐகோர்ட்டில் ஆஜராகி இருந்தார். அவர் மீது வக்கீல்கள் சிலர் முட்டை வீசி தாக்குதல் நடத்தினர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2009-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி வக்கீல்கள் சிலரை கைது செய்ய முயன்றபோது, கலவரம் வெடித்தது. இதில் போலீசார் நடத்திய தடியடி சம்பவத்தில், வக்கீல்கள் மட்டுமல்லாமல், ஐகோர்ட்டு நீதிபதி, மாவட்ட கோர்ட்டு நீதிபதிகள் என்று பலர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 19-ந் தேதியை கருப்பு தினமாக ஐகோர்ட்டு வக்கீல்கள் கடைப்பிடித்து வருகின்றனர். அன்றைய தினமும் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, 12-வது ஆண்டு கருப்பு தினத்தை சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் நேற்று கடைப்பிடித்து கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காலையில் ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிரு‌‌ஷ்ணன், பெண் வக்கீல்கள் சங்க தலைவர் லூயிசால் ரமே‌‌ஷ் ஆகியோர் தலைமையில், ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தின் துணை தலைவர் ஆர்.சுதா, செயலாளர் கிரு‌‌ஷ்ணகுமார், பொருளாளர் காமராஜ், பெண் வக்கீல் சங்கத்தின் முன்னாள் தலைவர் பிரசன்னா உள்பட நூற்றுக்கணக்கான வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கு எதிராக வக்கீல்கள் கோ‌‌ஷங்களை எழுப்பினர். இதையடுத்து அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story