கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி: போலீசார் தடுத்து நிறுத்தியதால் இஸ்லாமிய கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி: போலீசார் தடுத்து நிறுத்தியதால் இஸ்லாமிய கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Feb 2020 10:30 PM (Updated: 19 Feb 2020 6:45 PM)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி இஸ்லாமிய கூட்டமைப்பினர் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட வந்தபோது, மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தியதால் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்,

குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரியும், தேசிய குடியுரிமை பதிவேடு, தேசிய மக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கடந்த 14-ந்தேதி சென்னை வண்ணாரபேட்டையில் இஸ்லாமிய கூட்டமைப்பினர் போராட்டம் நடத்திய போது போலீசார் தடியடி நடத்தி 120 பேரை கைது செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் இஸ்லாமிய கூட்டமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றும் 6-வது நாளாக போராட்டம் நீடித்தது.

நேற்று இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில், சென்னையில் சட்டசபையை முற்றுகையிடப்போவதாகவும், மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனாலும் சென்னை போராட்டத்துக்கு ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்த நிலையில், மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இந்த நிலையில் விருதுநகரில் இஸ்லாமிய கூட்டமைப்பினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக அறிவித்திருந்தனர். மாவட்டம் முழுவதும் இருந்து இஸ்லாமிய மக்கள் விருதுநகரில் திரண்டனர். விருதுநகர்-சாத்தூர் சாலையில், கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

போலீசார், இஸ்லாமிய கூட்டமைப்பினரை மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே தடுத்து நிறுத்தினர். கூட்டமைப்பு பிரதிநிதிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என வலியுறுத்தியபோது, போராட்டத்திற்கு அனுமதி இல்லாத நிலையில் கலெக்டர் அலுவலகம் செல்ல அனுமதிக்க முடியாது என போலீசார் மறுத்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட விளையாட்டு அரங்கம் முன்பே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன், இஸ்லாமிய அமைப்பு பிரதிநிதிகள் பலர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாவட்ட தலைவர் முகமது ஷபீக் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம் ஜமாத்தார்கள், உலமாக்கள் மற்றும் 3 ஆயிரம் பெண்கள் உள்பட 5 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெருமாள் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போலீசாரின் முன்னேற்பாட்டினால் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. ஆர்ப்பாட்டத்தையொட்டி விருதுநகரில் முஸ்லிம்களின் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

Next Story