புகையிலைப்பட்டியில் ஜல்லிக்கட்டு: காளைகளுடன் மல்லுக்கட்டிய 21 பேர் காயம்
புகையிலைப்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகளுடன் மல்லுக் கட்டிய 21 பேர் காயம் அடைந்தனர்.
கோபால்பட்டி,
திண்டுக்கல்லை அடுத்த புகையிலைப்பட்டி புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நேற்று நடந்தது. திண்டுக்கல் ஆர்.டி.ஓ. உஷா கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார்.
முன்னதாக கால்நடைத்துறை மண்டல உதவிஇயக்குனர் விஜயகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் காளைகளுக்கு பரிசோதனை செய்தனர். மேலும் மாடுபிடி வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதையடுத்து வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன.
திண்டுக்கல், மதுரை, நத்தம், அலங்காநல்லூர், திருச்சி மற்றும் கொசவப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 550 காளைகள் சீறிப்பாய்ந்தன. காளைகளை அடக்க 464 பேர் பதிவு செய்திருந்தனர். அவர்கள் 100 பேர் வீதம் சுழற்சி முறையில் காளைகளை அடக்க அனுமதிக்கப்பட்டனர்.
களத்தில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க வீரர்கள் மல்லுக்கட்டினர். இருப்பினும் சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் துள்ளிக்குதித்தன. எனினும் சளைக்காமல் காளைகளை அடக்க வீரர் கள் போட்டி போட்டனர். சில காளைகளின் பெயரை கேட்டவுடன் வீரர் கள் பாதுகாப்பான இடத்தில் சென்று பதுங்கி கொண்டனர்.
காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர் களுக்கும் தங்கம், வெள்ளி காசுகள், மின்விசிறி, எவர்சில்வர் பாத்திரங்கள், சைக்கிள் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன. விறுவிறுப்பாக நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 21 பேர் காயமடைந்தனர். இவர் களுக்கு கொசவபட்டி வட்டார மருத்துவ அலுவலர் மலர்விழி தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
இதில் படுகாயம் அடைந்த நத்தத்தை சேர்ந்த வேல்முருகன் (வயது 30) என்பவர் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஜல்லிக்கட்டில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க போலீஸ் துணை சூப்பிரண்டு வீரபாண்டி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story