ஓலைச்சுவடிகளை ஊர் ஊராக சென்று சேகரித்தவர் உ.வே.சா. வருவாய் அதிகாரி பேச்சு


ஓலைச்சுவடிகளை ஊர் ஊராக சென்று சேகரித்தவர் உ.வே.சா. வருவாய் அதிகாரி பேச்சு
x
தினத்தந்தி 19 Feb 2020 11:00 PM GMT (Updated: 19 Feb 2020 7:37 PM GMT)

ஓலைச்சுவடிகளை ஊர் ஊராக சென்று சேகரித்தவர் உ.வே.சா. என்று வருவாய் அதிகாரி பொன்னம்மாள் பேசினார்.

வலங்கைமான்,

வலங்கைமான் வட்டம், உத்தமதானபுரத்தில் அமைந்துள்ள உ.வே.சா. நினைவு இல்லத்தில் பிறந்தநாள் விழா செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நேற்று நடந்தது. இதையொட்டி அவரது உருவச்சிலைக்கு, மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் கூறிய தாவது:-

உலகத்தில் உள்ள பழமையான மொழிகளில் ஹீப்ரு, தமிழ் ஆகிய 2 மொழிகள் மட்டுமே பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளை கடந்து இன்றும் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும் தமிழ்மொழி மட்டும் தான் எக்காலத்திலும் இலக்கியமாகவும், மக்கள் பயன்பாட்டு மொழியாகவும் தொடர்ந்து விளங்கி வருகின்றது. தமிழ்த்தாத்தா உ.வே.சா. ஓலைச்சுவடி வடிவில் இருந்த இலக்கியங்களை இன்றும் அனைவரும் படிக்கும் வகையில் புத்தக வடிவில் பதிப்பித்து சிறப்பான பணியை தமிழுக்காக ஆற்றி இருக்கின்றார்கள்.

சங்க இலக்கியங்களுக்கு

உ.வே.சா. ஓலைச்சுவடிகளில் இருந்து சங்க இலக்கியங்களை அச்சில் ஏற்றி சங்க இலக்கியங்களுக்கு உயிர்கொடுத்தவர். ஓலைச்சுவடிகளை ஊர் ஊராக சென்று சேகரித்தவர். தீயில் எரிந்ததையும், தண்ணீரில் ஆற்று நீரில் சென்றதையும் எடுத்து பாதுகாத்து, ஓலைச்சுவடிகளில் இருந்த எழுத்துக்களை முறைப்படுத்தி இலக்கியங்களை முழுமையாக்கி கொடுத்து ஆசிரியர், மாணவர் உறவுக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் உ.வே.சா. ஆவார். இளைய தலைமுறையாகிய நீங்கள் வாழ்வில் பிறந்தோம், இருந்தோம் என்று இல்லாமல் பொதுத்தொண்டில் சிறந்து விளங்க வேண்டும். அதன் மூலம் தங்கள் வீட்டிற்கும், நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் நல்லபெயரையும் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பரிசு

தொடர்ந்து உ.வே.சா. பிறந்தநாளையொட்டி நடத்தப்பட்ட திருக்குறள் ஒப்பு வித்தல், நாடகம், கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற 5 மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி பரிசுகளை வழங்கினார். இதில் திருவாரூர் உதவி கலெக்டர் ஜெயபிரீத்தா, ஒன்றியக்குழு தலைவர் சங்கர், ஒன்றியக்குழு துணைத்தலைவர் வாசுதேவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், தமிழ்செல்வி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சாந்தி, ஊராட்சி மன்ற தலைவர் செங்குட்டுவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story