ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்ட காய்கறி வியாபாரிகள் வாரச்சந்தை நடத்துவதை தடை செய்ய கோரிக்கை


ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்ட காய்கறி வியாபாரிகள் வாரச்சந்தை நடத்துவதை தடை செய்ய கோரிக்கை
x
தினத்தந்தி 19 Feb 2020 11:00 PM GMT (Updated: 19 Feb 2020 9:20 PM GMT)

வாரச்சந்தை நடத்துவதை தடை செய்ய வேண்டும் என்று கோரி காய்கறி வியாபாரிகள் ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

ஸ்ரீரங்கம்,

திருச்சி ஸ்ரீரங்கத்தில் மாநகராட்சியால் வழங்கப்பட்ட கடைகளில் 126 காய்கறி வியாபாரிகள் ஸ்ரீரங்கம் பிரகாரங்களில் தினமும் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணிவரையிலும் என மாறி மாறி கடந்த 80 ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக ஸ்ரீரங்கம் பகுதியில் வாரத்தில் 2 நாட்கள் திடீர் சந்தைகள் போடப்பட்டு வருகிறது. தெப்பக்குளம் அருகில் திங்கட்கிழமையும், கீதாபுரத்தில் வியாழக்கிழமையும் என 2 நாட்கள் மாலை வேளையில் காய்கறி வாரச்சந்தை நடத்தப்படுகிறது. இதனால், மாநகராட்சி அனுமதித்த கடைகளில் காய்கறி வியாபாரம் செய்பவர் களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், அழுகும் பொருட்களை கொள்முதல் செய்து விற்பனை செய்வதால் பெரும் ந‌‌ஷ்டத்தை சந்தித்து வருவதாகவும், வாரச்சந்தையை தடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று கடந்த 10-ந் தேதி கலெக்டரை சந்தித்து ஸ்ரீரங்கம் நகர காய்கறி வியாபாரிகள் நலச்சங்க தலைவர் கோவிந்தராஜூ தலைமையிலான வியாபாரிகள் மனு கொடுத்தனர்.

கோட்ட அலுவலகம் முற்றுகை

இந்த நிலையில் நேற்று ஸ்ரீரங்கத்தில் உள்ள மாநகராட்சி கோட்ட அலுவலகத்தை ஸ்ரீரங்கம் நகர காய்கறி வியாபாரிகள் நலச்சங்க தலைவர் கோவிந்தராஜூ, செயலாளர் ராஜூ மற்றும் வியாபாரிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் உதவி ஆணையர் வைத்தியநாதனை சந்தித்து முறையிட்டனர். அவர்களுடன் ஸ்ரீரங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் போலீசாரும் பங்கேற்றனர்.

அப்போது ஆணையர் வைத்தியநாதன் கூறுகையில்,‘‘வாரச்சந்தை நடத்துவதற்கு எங்களிடம் எவ்வித அனுமதியும் பெறவில்லை. வாரத்தில் 2 நாட்கள் நடக்கும் வாரச்சந்தை ஒன்று கீதாபுரத்தில் தனியார் இடத்தில் நடத்தப்படுகிறது. அதை தடுக்க முடியாது. மற்றொன்று தெப்பக்குளம் பகுதியில் பொது இடத்தில் நடத்துவது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நடத்தினாலும் எங்களால் வரிமட்டும்தான் விதிக்க முடியும்.’’ என்றார். அதிகாரியிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்காததால், வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Next Story