ஆட்டோ டிரைவர் கொலையில் தாய் மாமன்கள் கைது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ததால் கொன்றதாக வாக்குமூலம்


ஆட்டோ டிரைவர் கொலையில் தாய் மாமன்கள் கைது   மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ததால் கொன்றதாக வாக்குமூலம்
x
தினத்தந்தி 20 Feb 2020 4:15 AM IST (Updated: 20 Feb 2020 2:53 AM IST)
t-max-icont-min-icon

ஆட்டோ டிரைவர் கொலையில் அவரது தாய் மாமன்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ததால் தனது தம்பியுடன் சேர்ந்து அக்காள் மகனை கொன்றதாக போலீசில் வாக்குமூலம் அளித்து உள்ளார்.

ஆவடி,

ஆவடியை அடுத்த பூம்பொழில் நகர் பூங்கா தெருவைச் சேர்ந்தவர் புஜ்ஜி என்ற ராஜேஷ் (வயது 40). ஆட்டோ டிரைவரான இவர், வீட்டின் அருகில் உள்ள இறைச்சி கடை வாசலில் அடித்துக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுபற்றி ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், ராஜேஷின், தாய் மாமன்கள் 2 பேர்தான் அவரை உருட்டுக்கட்டையால் அடித்துக்கொலை செய்தது தெரிந்தது.

தாய் மாமன்கள் கைது

இதையடுத்து நேற்று ராஜேஷின் தாய்மாமன்களான வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த பள்ளிக்குப்பத்தைச் சேர்ந்த குணசேகரன்(57) மற்றும் ஆவடி அடுத்த அசோக் நகரைச் சேர்ந்த முனியப்பன் (54) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

போலீசாரிடம் குணசேகரன் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

நாங்கள் இருவரும், ராஜேஷின் தாய் நாகராணியின் தம்பிகள். எனது மனைவிக்கு மனநிலை சரியில்லை. அவருக்கு மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்படுவதால் நிலத்தை விற்று பணம் தரும்படி எனது அக்காளிடம் கேட்டேன். இதனால் என்னுடன் ராஜேஷ் தகராறு செய்து வந்தார்.

பாலியல் பலாத்காரம்

எனது மனைவிக்கு சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிப்பதற்காக எனது அக்காள் நாகராணி வீட்டில் மனைவியுடன் வந்து தங்கி இருந்தேன். சம்பவத்தன்று போதையில் வீட்டுக்கு வந்த ராஜேஷ், அத்தை என்றும் பாராமல் எனது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதை நேரில் பார்த்த எனது அக்காள், அவரை கண்டித்தார். வெளியே சென்று இருந்த நானும், அப்போது வீட்டுக்கு வந்து, நடந்த விவரங்களை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இனியும் ராஜேசை விட்டு வைக்க கூடாது என்ற முடிவுடன் எனது தம்பி முனியப்பனுடன் சேர்ந்து ராஜேசை உருட்டுக்கட்டையால் அடித்துக்கொன்றேன். பின்னர் உடலை இறைச்சி கடை வாசலில் போட்டுவிட்டு தப்பிச்சென்று விட்டோம்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

கைதான 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story