சாத்தூர் அருகே பரிதாபம்: பட்டாசு ஆலை வெடி விபத்து; 3 தொழிலாளர்கள் பலி - 6 பேருக்கு தீவிர சிகிச்சை


சாத்தூர் அருகே பரிதாபம்: பட்டாசு ஆலை வெடி விபத்து; 3 தொழிலாளர்கள் பலி - 6 பேருக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 20 Feb 2020 4:30 AM IST (Updated: 20 Feb 2020 2:59 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூர் அருகே நேற்று நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 3 தொழிலாளர்கள் உடல்கருகி பரிதாபமாக இறந்தனர். காயம் அடைந்த மேலும் 6 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

சாத்தூர்,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சின்னக்காமன்பட்டியில் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. அங்கு சுமார் 40 தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

நேற்றும் அந்த ஆலையில் வழக்கம்போல் பணிகள் நடந்து கொண்டிருந்தன. பகல் 11.30 மணி அளவில் சீனி பட்டாசு தயாரிக்கும் பகுதியில் சல்பர் மற்றும் அமோனியம் ஆகிய ரசாயனங்கள் சேமித்து வைத்திருந்த குடோனில் தீப்பற்றியது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த அறை முழுவதும் வெடித்து சிதறி தரைமட்டமானது.

அங்கு வேலை செய்து கொண்டிருந்த மீனம்பட்டியை சேர்ந்த பாண்டியராஜன் (வயது 28), கார்த்தி, பாரப்பட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி (58) ஆகியோர் உடல் கருகி பிணமாகி கிடந்தனர். பெண்கள் உள்பட மேலும் சிலர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

இதற்கிடையே வெடிவிபத்து ஏற்பட்டதை அறிந்ததும் அந்த ஆலையில் மற்ற இடங்களில் பணியில் இருந்த தொழிலாளர்கள் பதறியபடி வெளியே ஓடினர்.

தகவல் அறிந்ததும் சாத்தூர் மற்றும் சிவகாசி, வெம்பக்கோட்டை ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீ மேலும் பரவாமல் அணைத்தனர். போலீசாரும் வந்து காயம் அடைந்தவர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்தினர்.

சின்னகாமன்பட்டியை சேர்ந்த விஜயகுமார் (45), பாரப்பட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் முருகன் (30), மேட்டமலையை சேர்ந்த செல்லபாண்டி மனைவி வள்ளியம்மாள் (62), கோட்டைசாமி மனைவி முத்துலட்சுமி (33), சின்னக்காமன்பட்டியை சேர்ந்த பொன் நரியான் மனைவி அன்னலட்சுமி (55), ராமசாமி மனைவி வள்ளியம்மாள் (52) ஆகியோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சைக்காக சாத்தூர் மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனைகளுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். இதில் விஜயக்குமார் உள்பட 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

விபத்து நடைபெற்ற பட்டாசு ஆலையில் எந்திரம் மூலம் இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்றது. சம்பவ இடத்தை மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஆனி விஜயா, சாத்தூர் துணை சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டனர். இதே போல் விருதுநகர் மாவட்ட வருவாய் அதிகாரி உதயகுமார், சாத்தூர் கோட்டாட்சியர் காளிமுத்து ஆகியோரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

இந்த வெடி விபத்து தொடர்பாக சாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story