அருந்ததிய மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தை அளவீடு செய்து தரக்கோரி குடியேறும் போராட்டம்


அருந்ததிய மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தை அளவீடு செய்து தரக்கோரி குடியேறும் போராட்டம்
x
தினத்தந்தி 20 Feb 2020 5:00 AM IST (Updated: 20 Feb 2020 3:04 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி அருகே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தை அளவீடு செய்து தரக்கோரி அருந்ததிய மக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் ஆட்டுக்காரம்பட்டியில் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த 120 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு வீட்டுமனைகள் வழங்க ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 3 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அந்த நிலம் பயனாளிகளுக்கு அளவீடு செய்து வழங்கப்படாமல் இருந்து வந்தது. இதற்கிடையே அந்த நிலத்தை தனிநபர் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது.

இதனால் அரசு ஒதுக்கீடு செய்த நிலத்தை அளவீடு செய்து ஒப்படைக்க வேண்டும் என்று அருந்ததியர் மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஆட்டுக்காரம்பட்டியில் நிலம் வழங்கப்பட்ட பகுதியில் நேற்று மாலை திரண்ட அருந்ததிய மக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு அடுப்பு வைத்து சமையல் செய்த அவர்கள் ஒப்பாரி வைத்து கோரிக்கையை வலியுறுத்தினார்கள்.

இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-

பேச்சுவார்த்தை

இந்த பகுதியில் எங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தை ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து விடுவித்து அளவீடு செய்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 9 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஆனால் அதற்கான நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை. எனவே நிலத்தை அளவீடு செய்து வழங்கும் வரை தொடர்ந்து இங்கேயே இருந்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தனர்.

இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கோவிந்தன், தாசில்தார் சுகுமார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இருந்தபோதிலும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

Next Story